பக்கம்:கனிச்சாறு 8.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  125


தோதுபல ஆய்ந்தாலும் தோற்றுத்தான் போவீர்!
இன்றன்றாம்; இனியன்றாம்; எந்நாளும் இதுபோல்
எப்புலவ னும்காட்டான் இயற்கைசெயும் கூத்தை!
ஒன்றன்மேல் ஒன்றடுக்குந் தாமைரைப்பூ விதழ்க்குள்
உறங்குகின்ற ருளை எவன் காட்டிவிட்டுப் போனான்?

பாடலினைக் கேளுங்கள்; ‘அடுக்கிதழ்த்தா மரைப்பூ
இதழ்தோறும் அடிப்புறத்தில் படுத்திருப்பாய் நீதான்”

ஓடவிழ்க்க வெளிப்படுமோர் ஒளிமுத்தம் போல
இயற்கையின துண்மையெலாம் கண்டுகண்டே உரைத்தான்!
தேடரிதாம் சொற்களெலாம் பாவேந்தன் உள்ளம்
தேடிவந்து குடிபுகுந்து தேவைவரும் போதில்
மூடரிதாம் வாயில்வழி தூவல்வழி யாக
மூண்டுவரும் பாட்டாகப் பாரதிதா சற்கே!


2. இனம்

இயற்கையினை ஒருவாறாய் ஈங்கெடுத்துச் சொன்னேன்!
இனம்பற்றிக் கூறுமவன் கருத்துநலன் கேட்பீர்!
செயற்கையிலாப் புலவனவன்! செந்தமிழ்த்தேன் ஊற்று!
செப்புகின்றான் கேளுங்கள்! எண்ணுங்கள் இதனை!

“தமிழர்நாம் என்றால் நம்பால்
தமிழ்உண்டா? ஒழுக்கம் உண்டா?
அமைவுறச் சிறிது முண்டா
அன்றைய மறத்த னந்தான்?
கமழ்ந்திடல் உண்டா கல்வி?
கலைநலம் உண்டா? நெல்லின்
உமிமுனை அளவி லேனும்

ஒற்றுமை உண்டா?” - என்ன?


மயற்கையுள்ள தமிழினத்தின் முன்வந்து நின்று
மற்றொன்றைக் கேட்கின்றான்! சொல்லுங்கள் பார்ப்போம்.

“வெள்ளையன் ஆட்சி தொலைத்தோம்! - இனி
வேற்றுமை யுற்றுக் கிடந்தால்
எள்ளி நகைபுரி யாரோ? - நமை
இப்பெரு வையத்தில் உள்ளோர்?

கொள்கை திருத்திடு வீரே!”


முயற்கையை யானைக்கை போல்மிகவே நீட்ட
முயல்கின்றோம் முயல்கின்றோம்? தோற்றுப்போ கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/139&oldid=1448485" இலிருந்து மீள்விக்கப்பட்டது