பக்கம்:கனிச்சாறு 8.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


அதைக்கண்டு வருந்துகின்றான் பாவேந்தன் இங்கே!
அப்பாட்டில் அவன் ஏக்கம் கனவெல்லாம் தோன்றும்!

“சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?
சமயம் சாதி தவிர்வ தெந்நாள்?”

“வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொ ணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளுநாள் எந்நாள்? உள்ளம்

சொக்கும்நாள் எந்த நாளோ?”


இதைக்கண்டு கொண்டோம் நாம்? என்செய்தோம்? இங்கே
ஏற்றத்தாழ் வொழிந்ததுவா? சாதிகள் மாய்ந் தனவா?
கதைக்கின்றோம் பாடுகின்றோம்! பாவேந்தன் சொன்ன
கருத்துக்கும் மதிப்பில்லை! விழாவெடுப்போம்! அதனால்
புதைக்கின்றோம் அவன்பெருமை! புகழ்ச்சிவெறுஞ் சொல்லா?
புரட்சிசொன்னான்! மருட்சியுற்றோம்! இருட்காட்டில் வாழ்வோம்!

‘இருட்டறையில் உள்ளதடா உலகமெலாம் சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றான்’
என்றான்!
திருட்டுக்கூட் டம்தமிழர் கூட்டமென்று சொல்வேன்.
தில்லுமல்லுக் கூட்டந்தான்; இல்லையென்று சொன்னால்
குருட்டடியாய்ப் பாவேந்தன்பாட்டையெல்லாம் கூட்டங்
கூட்டந்தோ றும்சொல்லிப் பெரும்புலவர் போல
மருட்டுவமா மக்களைநாம்? சொன்னவற்றுள் ஒன்றை
மதிப்பிற்கே னும்செய்து பெருமைபெற் றோமா?

இனம்பாடி இனம்பாடி இனம்விழிக்கும் என்றே
எதிர்பார்த்தான் எதிர்பார்த்தான்! இனும்விடியவில்லை!
மனம்போன படிவாழ்ந்து மாக்களினும் கேடாய்
மண்ணுலகில் தமிழினந்தான் பின்னடைந்த தென்று
பெனம்பெரிய பெருமையினை நாம்வாங்கிக் கொண்டோம்!
பேசுகின்றோம்! வீசுகின்றோம்! பெருத்தநடை போட்டோம்!
இனும்திருந்த வில்லையெனில் என்றுந்திருந் தோம்நாம்!
‘இன்னலிலே துயில்கின்றோம்’ பாவேந்தன் சொல்வான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/140&oldid=1448486" இலிருந்து மீள்விக்கப்பட்டது