பக்கம்:கனிச்சாறு 8.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 129


சாதியொழி யாதஒரு மக்களினந் தன்னில்
சரிநிகர்த்த வாழ்வெங்ஙன் அமைந்துவிடும் - என்றான்.

“சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?
சமயம் சாதி தவிர்தல் எந்நாள்?’

‘என்றுதான் சுகப்படுவதோ? - நம்மில்
யாவரும் சமானம் என்ற நன்னிலை யில்லை அந்தோ
ஒன்றுதான் இம் மானிடச் சாதி -இதில்

உயர்பிறப் பிழிபிறப் பென்பதும் உண்டோ’


சாதியொழி யாநிலையில் குடியரசால் என்ன
சாய்த்துவிடப் போகின்றோம்? சட்டங்கள் வேண்டும்!
மீதிவகைத் திருத்தமெனப் பட்டியல்கள் சொல்வான்!
மேம்பட்ட புலவனவன் பாடுவது கேட்பீர்!

‘நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள்
நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்!
காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே
நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே!
உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்!
கேட்டையினி விலைகொடுத்து வாங்கோமே;சாதி

கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே’!


‘ஒருகடவுள் உண்டென்போம்; உருவணக்கம் ஒப்போம்;
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால்;
திருக்கோயில் தொழிற்சாலை’
என்றவனும் சொல்வான்!
தீமைதரும் தொல்லைகளை உடன்மாற்றக் கேட்டான்.
திருமணத்தும் சீர்திருத்தம் வேண்டுமென்று சொல்லித்
‘திராவிடர்க்குப் புரட்சியான திட்ட’மொன்று தந்தான்
ஒருமணத்தை ஆதரித்தான்! மறுமணத்தை ஏற்றான்.
உயர்காதல் போற்றுதற்குத் கருத்தடையை ஏற்றான்.

‘காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம்! இதிலென்ன குற்றம்?
சாதலுக்கோ பிள்ளை? அன்றித் தவிப்பதற்கோ’
என்று
சாட்டையடி யாய்க்கேட்டான் பல்லாண்டு முன்பே!
தீதில்லாப் பொதுவுடைமை வேண்டுமெனச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்களை உலகறிய வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/143&oldid=1448528" இலிருந்து மீள்விக்கப்பட்டது