பக்கம்:கனிச்சாறு 8.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘புதியதோர் உலகுசெய் வோம் -கெட்ட
போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்!’

‘எல்லார்க்கும் எல்லாம் என் றிருப்ப தான
இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்!’

‘எல்லார்க்கும் தேசம்! எல்லார்க்கும் உடைமையெலாம்!

எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!’


கோதில்லா நெஞ்சத்தின் உயர்கருத்தாம்! இவற்றைக்
கோணல்உல கம்ஏற்று, நிலைநிமிரல் வேண்டும்!

‘கட்டாயக் கல்வியொடு பணிவேண்டும்’ என்பான்!
‘கல்விதராக் கசடர்க்குத் தூக்குமரம்’ என்றான்!
‘திட்டமிட்டுத் தொழிலாளர் ஒன்றுபடல் வேண்டும்,
தீங்குவரும் இல்லையென்றால்’
என்றறிக்கை செய்வான்!

‘வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால்!
கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால் இன்றுவரை

மூடிய தொழிற்சாலை முக்கோடி’ - என்பான்!


மட்டமெனத் தமிழ்மொழியை மதிக்கின்ற செயலை
மடமையெனக் கடிந்தொதுக்கித் தமிழர்களைப் - பார்த்துத்
திட்டமிட்ட படைவேண்டும் தமிழ்காக்க என்றான்
தெருவிலுள்ள பலகைகளில் தமிழ்வேண்டும் என்றான்!

‘வாணிகர்தம் முகவரியை வரைகின்ற பலகையில் ஆங்
                          கிலமா வேண்டும்?
மாணுயர்ந்த செந்தமிழால் வரைக என அன்னவர்க்குச்

                         சொல்லல் வேண்டும்!’


தனித்தமிழை வற்புறுத்தித் ‘தமிழியக்கம்’ செய்தான்!
தான்தொடக்கத் தெழுதிவிட்ட கலவைநடை போல
இனித்தாளில் எழுதிடுவ தில்லையெனச் சொன்னான்!
எம்மொழிக்கும் தமிழ்மொழியே தாய்மொழியென் றார்த்தான்!
தனித்தமிழை வற்புறுத்திப் பாவேந்தன் சொன்ன
தங்கவரிப் பாடல்களை நம்மிளைஞர் பாடிப்
பனித்தமிழை உலகமெலாம் பரப்பிடுதல் வேண்டும்!
பாவேந்தன் பாடுகின்றான் செவிமடுத்துக் கேட்பீர்!

‘தொண்டர்படை ஒன்றமைத்துத் தமிழ்எதிர்ப்போர்
தொடர்ந்தெழுதும் ஏட்டையெல்லாம்
கண்டறிந்த படிஅவற்றை மக்களெல்லாம்

மறுக்கும்வண்ணம் கழற வேண்டும்!’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/144&oldid=1448529" இலிருந்து மீள்விக்கப்பட்டது