பக்கம்:கனிச்சாறு 8.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  147


புதுக்கோட்டைக் கவிதைப் பித்தன் புகலுவார்!
மதுக்கூட்டைத் திறந்ததுபோல் மாண்பு சிறக்கவே!

அடுத்து,
பாவேந்தர் சொன்ன ‘பகுத்தறிவுக் கொள்கை’யினை
நாவேந்திச் சொல்லிடுவார்; நந்தமிழ்ப்பே ராசிரியர்
குருவிக் கரம்பை சண்முகனார்; அவரோர்
அருவி தமிழ்ப்பாட்டில்! அவர்பாடல் கேட்போம்!

அடுத்து,
‘விடுதலைக் குரலை’ஒலிக்க வருகின்றார்!
கொடுதலை என்றாலும் கொடுப்பார்; பாவலர்
குடியரசு
என்பார்! கூறுவது கேட்போம்!
விடியட்டும் உரிமையால்! விரைவில்நம் நாடே!

இறுதியாக,
‘புரட்சிக் குரல்’தன்னைப் பொன்னி வளவனெனும்
தெருட்சிப் புலவரவர் தீந்தமிழில் பாவரசர்
வந்தொலித்துக் காட்டுவார்! வாழ்த்தி அழைக்கின்றேன்
சிந்தொலிக்கும் பாவடியால் தேர்ந்து!

முடிவுரை:

பாவலர் யாவரும் பாடினர் நன்றே!
பாவேந்தர் கருத்தினைப் புகழினை இங்கே!
ஆவலாய்க் கேட்டீர்கள்! அனைவர்க்கும் நன்றி!
அடுத்தென்றன் கருத்தையும் கேட்பீர்கள் நன்கு!
காவலாய்த் தமிழுக்கும் இனத்திற்கும் நின்றான்!
கனித்தமிழ் பாடினான் புதுவைப்பா வேந்தன்!
கூவலாய் அழைக்கின்றேன் தமிழரெல்லாரும்
கூடிஒன் றாய்நிற்பின் இனமீட்சி கூடும்!

1. புரட்சிக்குரல்!

பழந்தமிழப் புலவர்போல் அவனெழுத வில்லை;
பாவேந்தன் புதுமைக்குக் குரல்தந்து நின்றான்!
இழந்திட்ட புகழ்மீட்க எந்தமிழைப் பாடி
எழுத்தாலே புரட்சிக்குக் கனல்மூட்டி வந்தான்!
முழந்தேடிச் சொற்களையும் வரிகளையும் எழுதல்
முழுவதுமே புலமைக்குத் திறம்என்றெண் ணாமல்
குழந்தைக்கும் விளங்குகின்ற எளியசொல் லாலே
குமுகாயச் சீர்மைக்குப் பாடல்கள் யாத்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/161&oldid=1448556" இலிருந்து மீள்விக்கப்பட்டது