பக்கம்:கனிச்சாறு 8.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


எழுச்சிக்குக் குரல்கொடுத்தான் தமிழர்எல்லாரும்
இனமீட்க எழுந்தொருங்கே வாருங்கள் என்றான்!
முழுச்சிதைவே வுற்றிருக்கும் இனநலமுன் னேற்றம்.
முன்பிருந்த வரலாற்றைப் புதுக்குகின்ற நோக்கம்.
மழுச்சிதைவே இல்லாமல் உழவேண்டும் தமிழர்
மறுமலர்ச்சி பெறவேண்டும் தமிழ் இனமும் நாடும்!
குழுச்சிதைவாய் இல்லாமல் கட்சிசிதை வின்றிக்
கூடிநின்றால் தமிழர்க்கு வெற்றியுண்டாம் என்றான்!

பாவேந்தன் புரட்சியுரை கேட்பீர்கள் இங்கே!
பாக்களிலே கருத்திருக்கும் உணர்விருக்கும் பாரீர்!
ஈவேந்தா நோக்கினிலே இழப்பேந்திச் சொன்னான்!
எழுகஇன்றே தமிழரெல்லாம் எனஆர்த்து நின்றான்!
சாவேந்தாப் புகழ்பெற்றோன் தமிழ்த்தொண்டு செய்வோன்
சாவதில்லை சாவதில்லை எனக்கூறிச் சென்றான்!
நாவேந்தும் கருத்துகளைப் பலநூறு பாட்டில்
நாள்தோறும் குயில்குரலில் நம்மவர்க்குச் சொன்னான்!

1. அவன்செய்த தமிழ்ப்புரட்சிக் கார்த்தகுரல் இதுவாம்!
ஆரிதுபோல் சொல்லிவைத்தார்? அனைவரும்கேட் பீர்கள்!

(வேறு)


தமிழனே இதுகேளாய் - உன்பால்
சாற்ற நினைத்தேன் பலநாளாய் (தமிழனே)

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிறமொழிக ளோவெறும் வேம்பு
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம்முரிமை தனைக் கடித்ததப் பாம்பு (தமிழனே)

வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம் இந்நாள் அவரஞ்சி விழித்தார் (தமிழனே)

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு
தமிழே ஞாலத்தின் தாய்மொழி பண்டு
கனிச்சாறு போல்பல நூலெல்லாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு (தமிழனே)


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/162&oldid=1448557" இலிருந்து மீள்விக்கப்பட்டது