பக்கம்:கனிச்சாறு 8.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


புரட்சிப் பாவலர் புகட்டிய மறப்பால்
குறட்டை விட்ட தமிழரின் குரலையும்
வறண்ட நெஞ்சையும் நனைத்ததும் தமிழர்
அரண்டு விழித்தனர்; ஆர்த்தெழுந் துருமினர்!

மறந்த தமிழ்நலம் பேணத் தொடங்கினர்!
இறந்த பழம்புகழ் தமிழ்மேல் ஏற்றினர்!

ஆரியப் பகையின் அடிவயிறு கலக்கினர்!
ஏறிய அவர்திறம் இறக்கிக் காட்டினர்!

(வேறு)


ஈங்கிதைத்தான் பாவேந்தன் எடுத்துரைக்கக் கேட்டோம்!
ஏற்றமிகு பாக்களினால் மாற்றம்வரக் காணோம்!
ஆங்கதையே பெருமை யெனக் கருதிவிட்ட ததனால்
அவன்கருத்தை விட்டுவிட்டே அவன்பெருமை ஆர்ப்போம்!
தூங்குகின்றோம்; தூங்குகின்றோம்; தூங்குகின்றோம் இன்னும்!
தொடையினிலே கயிறுபிறர் திரிக்கத்தூங் குகின்றோம்!
ஏங்கினவன் பாவேந்தன்! எடுத்தெடுத்துச் சொன்னான்!
எந்தமிழர் கேளார்கள் எனவறிந்தும் சொன்னான்!
இறுதியிலே உங்கட்குச் சொல்லுகின்றேன் பெரியீர்!
எந்தமிழத் தாய்மாரே! இளைஞர்களே! தமிழீர்!
உறுதியிலே நமக்குய்தி வேண்டுமென்றால் முதலில்
உணர்வுபெற நாமெல்லாம் ஒன்றாதல் வேண்டும்!
அறுதியிட்டுச் சொல்கின்றேன் தமிழொன்றே நம்மை
அனைவரையும் ஒன்றிணைக்கும்! ஓரினமாய் ஆக்கும்!
மறுதிசையில் முகந்திருப்பா துளந்திருப்பா திருப்பின்
மறுநொடியில் இனம்செழிக்கும்! தமிழ்நாடும் கிடைக்கும்!

வாழ்க தமிழ்!
      வெல்க தமிழர்!
வருக தமிழராட்சி!
      வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/176&oldid=1448597" இலிருந்து மீள்விக்கப்பட்டது