பக்கம்:கனிச்சாறு 8.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 ☐ கனிச்சாறு - எட்டாம் தொகுதி


எந்தமிழால் கூடி இசைத்தமிழைப் பாடிநடந்
தந்தோம்தந் தோமெனவே தாளங்கள் போடாரோ?
வாழ்க்கைத் துயரெல்லாம் வன்பொடியாய்ப் போகாதோ?
பாழ்க்கை மனப்பூசல் பாழ்வெளிக்கே ஏகாதோ?
சாதிச் சழக்கெல்லாம் சாத்திரத்தின் பூசலெல்லாம்
ஊதிப் புறந்தள்ளி ஓங்குநிலை காணாரோ?
அற்றைப் புலவரெல்லாம் ஆங்கொருங்கே வீற்றிருந்தே
இற்றைப் புவிமாந்தர் ஏற்றமிகக் கொள்ளுதற்கே
காட்டிநின்ற நல்வழியைக் கண்ணெடுத்துப் பாராரோ?
வாட்டும் வறுமைக்கே வல்லுறக்கம் வாய்க்காதோ?
கொட்டிவைத்த முத்தளந்து கொண்டுவந்த பொன்னளந்தே
கட்டிவைத்த நற்புகழால் காணியெலாம் தாமளந்த
பாண்டியனார் மக்கள் பழம்புகழைத் தேராரோ?
மீண்டுமிந்தச் செந்தமிழை மேன்மைப் படுத்தாரோ?
சோழன் அறப்பெருமை சொந்தமெனக் கொள்ளாரோ?
வீழாத தோளான் வியன்சேரன் சீர்த்தியெல்லாம்
பாட்டாகப் பாடிப் பைந்தமிழைப் பாய்ச்சாரோ?

கூட்டாக நின்றியங்கிக் கோடா அறம்வளர்த்துச்
செந்தமிழை வான்தூக்கிச் செங்கதிர்க்கு மேல்நிறுத்தி
இந்தவுல குய்ந்திடவே ஏற்றம் உரைக்காரோ?
வள்ளுவனார் வாய்மை வழிவழிக்கே நின்றிருக்க,
கொள்ளும் உயர்வாழ்க்கைக் கூறுகளை மக்களினம்

ஏற்று வழிநடக்கும் இன்பநிலை வாயாதோ?
வேற்றூர் அயலர்எனும் வேற்றுமைகள் சாயாவோ?
மண்ணாவல் கொண்டுலக மாந்தர் மடிவதையும்
எண்ணாமல் வாய்மையறம் ஏற்காமல் தீமைசெயும்
வல்லரசப் போக்கை வழிமடக்க மாட்டாரோ?
நல்லரசால் இவ்வுலகை நல்லுலகாய் மாற்றாரோ?
தம்மனைவி தம்மக்கள் தம்வாழ்க்கை தாம் என்றே
தம்மனத்துக் கொள்ளும் தருக்கெல்லாம் வீழாதோ?
இவ்வுலக வாழ்க்கைநலம் எல்லாம்எல் லார்க்குமெனும்
அவ்வுரையெங் காதில்தேன் ஆறாகப் பாயாதோ?

காற்றேபோல் செங்கதிர்போல் காருலவும் வானம்போல்
ஊற்றேபோல் மண்ணின் உடைமை பொதுவென்னும்
ஏற்றவுரை என்றன் இருசெவியால் கேளேனோ?
மாற்றத்தை என்றன் மணிவிழிகள் காணாவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/18&oldid=1447557" இலிருந்து மீள்விக்கப்பட்டது