பக்கம்:கனிச்சாறு 8.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  173


“விடுதலை பெறுவது முதல் வேலை!
அடிமையில் உழல்வது முடியாது!

விழிதுயில் வதுமிகு தவறாகும் எழுவீரே”


- என்று எழுச்சி பாடினான்

இனியவனும் நாடுபற்றி எடுத்துரைத்த வெல்லாம்
இங்கெடுத்துக் கூறிவிடல் எளிதிலைகாண் பெரியீர்!
‘எனையீன்ற தந்தைக்கும் தாயினுக்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாடு தனக்குமென்ற னாலே
தினையளவும் நலமேனும் கிடைத்திடுவ தென்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாம்'என்றே
பனிமொழியில் சூளுரைத்துப் பாவேந்தன் சொன்னான்!
பாவலருள் எவரிந்த உரைசொன்னார்? பாரீர்!

எரிகின்ற நெஞ்சின்மேல் ஆணையிட்டுச் சொன்னான்!
இனியெங்கள் ஆட்சியிந்த நாட்டிலென்றே உரைத்தான்!
எரிசருகு தமிழர்களை எதிர்த்திடுவோர் என்றான்!
இன்னுமவன் நாடுபற்றிச் சொன்னமொழி கேட்பீர்!

‘ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்’

‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!


புரிகின்ற தமிழ்ப்போர்க்குப் புதுப்புரட்டுக் காரர்
புலைமனத்தால் தடையிடுவார் நாம்அஞ்சல் வேண்டாம்!
சரிகின்ற தமிழினத்தைக் காத்திடுதற் கென்றே
சாகாத உணர்வுடைய இளைஞர்க்கிவை சொல்வான்!

‘சிம்புட் பறவையே சிறகை விரி! எழு!
சிங்க இளைஞனே! திருப்புமுகம்! திற விழி!

இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/187&oldid=1448641" இலிருந்து மீள்விக்கப்பட்டது