பக்கம்:கனிச்சாறு 8.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி!
இடைநாளில் மட்டுமா? சென்ற
இரண்டாயிரத்தாண்டு பார்த்தார்!
விடுவா யடா தன்னலத்தை - உன்
விடுதலை திராவிடர் விடுதலையில் உண்டு!”

“வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?
வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ?
அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை!
ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை!”

“சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்!
செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்!
பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு!
போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!”

‘எந்தமிழ் அன்னை துன்பம் நீங்கித்
தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன்!
என்தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத்
துலங்குதல் காண்பேன் தமிழர்
நலங்காண் பேன்நான் நானில மீதிலே!”

‘வீடெல்லாம் விடுதலை முழக்கம் மேவுக!
ஊரெல்லாம் விடுதலை முழக்கம் உயர்க!
காலையில் விடுதலை முழக்கம் காட்டுக!
உண்ணுமுன் விடுதலை முழக்கி உண்க!

உறங்குமுன் விடுதலை முழக்கி உறங்குக!


4. இயற்கை உணர்வுள்ளம்!


இருக்கின்ற பாவலர்கள் இருகோடி என்றால்
இயற்கைப்பா வலர்அவருள் இருபதுபேர் இருப்பர்!
கருக்குழியில் ஒளியேறி உணர்வேறித் திருவில்
கற்பனையாம் பொலிவேறிப் பாட்டுணர்வும் ஏறி,
உருக்கொண்டு தாய்மடிமேல் வீழ்ந்தபின்னே அவளின்
ஒளிமார்புக் காம்புவழித் தமிழேறிப் பாய்ந்தால்,
தெருக்கடையில் இறங்குகையில் பாட்டுவரும் தெளிவீர்!
தெம்மாங்குச் செந்நாவில் எழுந்துவிளை யாடும்!
அன்னவரைத் தாம்இயற்கைப் பாவலர்கள் என்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/188&oldid=1448643" இலிருந்து மீள்விக்கப்பட்டது