பக்கம்:கனிச்சாறு 8.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 கனிச்சாறு - எட்டாம் தொகுதி

செந்தமிழ்ச்சீர் காட்டி இன்பம்
வார்க்கின்ற பாட்டுணர்வில்
வல்ல,திரு.
இராமச்சந் திரன்என் பாரை
ஆர்க்கின்ற மாணவர்தம் தமிழியக்க
அணிசேர்க்க அழைப்போம் இங்கே!

5.இதழாசிரியர் என்னுந்தலைப்பில் பாடிய
திரு சு.ப.முருகபாரதி பாடற்கு அறிமுகம்.


பாவேந்தர் கான்முளையாப் பைந்தமிழ்க்குத்
தொண்டாற்றிப் புலவோர் தம்மைச்
சாவேந்திப் போகாமல் புறங்காத்துத்
தமிழியக்கம் சார நின்று,
மூவேந்தர் தமிழ்காக்கும் சு.ப.முருக
பாரதி வாய் மூண்டு நிற்கும்
பாவேந்தும் இதழாளர் செவிகளோடு
நம்செவியும் பயன்பெ றட்டும்!

தலைவர் முடிவுரை

பாவலர்கள் தமிழியக்கம் பாடக் கேட்டீர்!
பைந்தமிழின் பேருணர்வு கொண்டிருப்பீர்!
ஆவலுறப் பெற்றிருப்பீர்! அகத்தே வாழும்
அன்னைமொழி காத்திடுவீர்! தமிழ்க்கே என்றும்
காவலிருக் கின்றார்கள் தமிழ்மா ணாக்கர்!
கட்டளைக்குக் காத்திருப்பார்! தமிழியக்கம்
மேவலுற வளர்ந்திட்டால் மேன்மை பொங்கும்!
மீமிசைசேர் மாந்தரினம் தோன்றும் இங்கே!

மாணவர்கள், வாணிகர்கள், அரசாள் வோர்கள்
மக்களிடைப் பேசுகின்ற பேச்சா ளர்கள்
மாணொக்கும் இதழாளர் செல்வர் எல்லாம்
மங்காத தமிழியக்கம் வளர்ப்பா ராயின்
தூணெனவே செந்தமிழும் உலக மன்றில்
துலக்கமுறக் கால்கொள்ளும்! வளமுற் றோங்கும்!
வீணரென வாழாமல் பயன்சேர் வாழ்க்கை
விளைத்திடுக! எல்லார்க்கும் விளையும் இன்பம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/22&oldid=1447625" இலிருந்து மீள்விக்கப்பட்டது