பக்கம்:கனிச்சாறு 8.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


2. திருவள்ளுவர் விழாவா? பயனென்ன?


[திருவாரூரில் (2.3.69) கும்பம் 16 அன்று தொடங்கி நடந்த திருவள்ளுவர்
ஈராயிரமாண்டு விழாவில் முதல்நாள் நடந்த பாட்டரங்கத்தின் தலைமையுரை]


பேரன் புடைய பெரியோரே! தாய்மாரே!
சீரன்பு கொண்டிருக்கும் மாணவச் செல்வங்காள்!
பாட்டரங்கம் ஏறவந்த பாவலர்காள்! அன்பர்காள்!
கூட்டிருக்கும் ஆவி குழைய வணங்குகிறேன்.

இங்கு, திரு வள்ளுவரின் ஈரா யிரமாண்டு
பொங்கி நிறைந்தவொரு பூரிப்பால் நம்முள்ளம்
விம்மும்; புளகமுறும்; வெற்றி விழாவெடுக்கும்!
எம்மூரும் எந்நாடும் எவ்வினமும் வள்ளுவரைத்
தம்மூரான் தம்நாட்டான் தம்மினத்தான் என்று கொள்ளும்
பெற்றித் திருமான், பெறலரிய மெய்ப்புகழோன்,
வற்றியநம் வாழ்க்கை வளம்பெருக்கும் நல்லாசான்,
நல்லறத்தின் வித்து, நடுவூர்ப் பழுத்தமரம்!
இல்லறத்தைக் காத்த எழில்தந்தை, நற்செவிலி,
ஆட்சி வகுத்த அறவாணன், செந்தமிழ்க்கு
மாட்சி கொடுத்துயர்ந்த மாப்புலவன், பாட்டிறைவன்,
கல்விக் கதிரோன், கருத்துக்குச் சொல்லுழவன்,
பல்துறைக்கும் உள்ளொளியால் பாட்டுரைத்த செம்புலவன்,
தன்பெயரைக் கூறாத் தனித்தகையோன், கல்விவள்ளல்,
அன்புரையால் தீமை அறக்கடியும் நன்னெஞ்சன்,
ஆழ்ந்தகன்ற பேரறிவால் ஆன்ற முதல்நூலான்,
காழ்த்த அறிவுமணி, கங்குகரை யற்றகடல்!

அன்ன பெரும்புலவர்க் கான்ற திருவிழவில்
என்னை, சிறியேனை, எற்றுக்கும் பற்றாத
துன்னுஞ் சிறுதுரும்பைத் தூணென்று கொண்டதுபோல்
மன்னும் பெருவிழவின் மன்றத் தலைவனெனக்
கொண்டு புகழ்கொண்டீர் கூற்றிற் குறைபொறுப்பீர்!
தொண்டேஎம் வாழ்வெனலால் தோல்வியும்எம் வெற்றியன்றோ?
வாழுந் தமிழ்க்குலத்தீர்! வாழ்க்கை பலகோடி!
சூழுகின்ற வாழ்க்கையெலாம் சோற்றுக்கே என்போம் நாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/24&oldid=1447627" இலிருந்து மீள்விக்கப்பட்டது