பக்கம்:கனிச்சாறு 8.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  11


நல்லறங்கள் செய்யோம்; நலந்தேடி நாம்போகோம்,
வல்லமற நெஞ்சால் வருந்துயருக் காட்பட்டோம்!
ஈட்டலெல்லாம் தீநெறியே! ஈவதெல்லாம் தீநெறிக்கே!
நாட்டலெல்லாம் பொய்யுரையே! நாடலெல்லாம் போலிகளே!

மெய்யுரைக்கச் சொல்லிடுவோம்; மெய்பேச நாம் விரும்போம்!
பையுறைக்குள் பைவைத்துக் காசைப் பதுக்கிடுவோம்!
தொண்டைக் குழிநிறைந்து துப்பித் தொலைத்தாலும்
அண்டையயல் உள்ளார்க் கணுவளவும் நாம் கொடுக்கோம்!

பட்டென்றும் சீமைப் பருத்தித் துணியென்றும்
கட்டிக் கிழித்தாலும் கட்டாது போனாலும்
இல்லாத ஏழையர்க்கோர் கந்தையினை ஈந்தறியோம்!

கல்லாத நூலில்லை; கண்டஅறம் பல்கோடி!
என்றாலும் நாமோ இருந்தபடி யேயிருப்போம்!
குன்றாத செல்வம்! குலையாத நல்விளைவு!
தெய்வங்கள் கோடி! திருவிழா பல்கோடி!
மெய்யாக எண்ணுங்கள்! மேன்மை அடைந்தோமா?
என்ன நிலையால், என்ன நிகழ்ச்சியினால்
என்னபடி நாமுயர்ந்தோம் என்றே உரைப்பீர்கள்?
நாம்பெற்ற நாகரிகம் எல்லாம் அயல்நாட்டார்
தாம்கண்டு ஈந்த தவப்பயனா இல்லையா?

நாளிரவாய்க் கண்விழித்தும் நல்லவுணா வுண்ணாதும்
ஆளரவங் காணா நடுக்காட்டில் ஆன்றலைந்தும்
கண்டளித்த நற்பொருள்கள் அல்லால்நாம் கண்டதென்ன?
பெண்டளித்த இன்பமும் பிள்ளைப்பே றும்அல்லால்
நாம்கண்ட தென்னவென நாட்டுதற்கு வல்லோமா?
ஆம் கண்டோம் என்றொன் றறைதற்கே உண்டென்றால்
அன்பும் அறனுமல்லால் வேறென்ன? ஆய்ந்தறிவீர்!
இன்பமெல்லாம் இவ்விரண்டே என்றே குறள்முழங்கும்!
பண்பும் பயனுமதாம் என்னும் பழநூற்கள்!

இத்தகைய அன்பெங்கே? இற்றை அறமுண்டா?
பொத்தகத்துள் அல்லாமல் போக்கினிலே பண்புண்டா?
எங்ஙன் பயன்கிடைக்கும்? ஏனிவ் விழிந்தநிலை?
உங்கள் மனமழுந்த எண்ணி உரைத்திடுங்கள்!
வள்ளுவரைக் கொண்டாடி வான்முட்டப் பேசிடுவோம்!
கொள்ளளவே அவ்வுரையை நம்முளத்துக் கொண்டோமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/25&oldid=1447628" இலிருந்து மீள்விக்கப்பட்டது