பக்கம்:கனிச்சாறு 8.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


நூலெங்கே? நூல்கள் நுவன்றே அறமெங்கே?
கோலெங்கே? நேர்மைக் குணமெங்கே? பண்பெங்கே?
மெய்யெங்கே? வாழ்வென்னும் மேன்மைச் சிறப்பெங்கே?
வெய்ய கொடுவாழ்க்கை! வீணான பொய்வாழ்க்கை!
ஒவ்வொருவர் இல்லத்தும் ஒவ்வொருவர் உள்ளத்தும்
இவ்வினா நிற்கட்டும்! இன்பத் தமிழ்எங்கே?

மெய்வருந்த நாமுழையோம்! மேலோட்ட வாழ்வறிந்தோம்!
பொய்யஞ்சா நெஞ்சும் புளுகுரைக்கும் நாவுமல்லால்
இன்றைக்கு மீந்ததென்ன? ஏன்இம் மறவாழ்க்கை!
அன்றைக்கு யாத்த அறநூல் திருக்குறள்தான்!
ஆனாலும் அந்த அறநூல் உரைத்தவற்றை
ஏனோ மறந்தோம்; இனைய நிலைக்கிழிந்தோம்!
செப்பவாழ் வென்றுரைத்தோம்; செப்பமுற்று வாழவில்லை!
ஒப்புரவு கூறினோம்; நாம்காண ஒப்பவில்லை!

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை நன்றென்றோம் நாம்செய்ய எண்ணவில்லை!
அல்லவை தேய அறம்பெருகும் என்றுரைத்தோம்!
சொல்லியவை நூலிலுள; வாழ்விற்குச் சோறென்றோம்!
ஒல்லும் வகையால் அறவினைகள் ஓம்பென்றோம்!
சொல்லும் வகையெல்லாம் பொய்சொல்லி வாழுகின்றோம்!
ஓம்பும் ஒழுக்கம் உயிரென்றோம்; அம்மாவோ
தீம்புச் செயலே ஒழுக்கமெனத் தேர்ந்துவிட்டோம்!
வெஃகாமை வேண்டும் பிறன்பொருளென் றோதினோம்!
அஃகாவென் றங்காந் தலைகின்றோம் செல்வமெனில்!

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கென்றோம்; ஆனாலும்

நம்பால் ஒருவன் நடையாய் நடந்தாலும்
இம்மி யளவும் எடுத்தீய ஒப்புகிலோம்!

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவென்றோம் என்றாலும்
பத்துருபாத் தாள்களைநான் நூறாக்கு வேனென்றால்
ஒத்தவன்பின் ஓடி ஒருநூறு தாள்தந்தே
ஏமாறிப் பல்லிளித்தே இல்லம் திரும்புகின்றோம்!
நாமாறிப் போனோம்; நமதுள்ளம் மாறியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/26&oldid=1447629" இலிருந்து மீள்விக்கப்பட்டது