பக்கம்:கனிச்சாறு 8.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 13


நாகரிக ஆர்ப்பரிப்பில் நல்லுளத்தை மாய்த்து விட்டோம்!
ஈகம் அறிந்தோம்; இரப்புமேற் கொண்டோம்;
குடிமை நலனழித்தோம்; கூட்டுணர்வை விட்டோம்;
அடிமை மனங்கொண்டோம்; ஆளுடைமை நீக்கி விட்டோம்;
வள்ளுவனார் யாத்தளித்த வாய்மைத் திருக்குறள்போல்
வெள்ளம்போல் நூல்கள் விளங்கக் கற்றாலும்
நம்கீழ்மை நம்மைவிட் டிம்மி நகரவில்லை;
நம் மான நல்லுணர்வு நாற்றுத் துளிர்க்கவில்லை;

அன்புடையீர் என்சொல் அழல்போற் பாய்ந்தாலும்
மன்பதையுள் நாம்விட்ட மாண்பை நினையுங்கள்
ஓர்மின் குறளை! உணர்மின் பொதுநோக்கு!
பார்மின் உலகம்! பழிதுடைமின்! மக்கட்கே
தொண்டு புரிமின்! துடைமின் துயரங்கள்!
பண்டு மொழிந்த நலங்கள் பலகோடி!
எண்ணம் புதுக்குமின்! இன்பம் பெருக்குமின்!
பண்ணும் புதுமையினும் பண்டைப் பழமையினும்
நல்லவற்றைத் தேர்மின்! நயன்மை கடைப்பிடிமின்!
அல்லவற்றை நீக்குமின்! அன்புணர்வை வித்துமின்!

- இன்ன விளைவுக்கு எருப்போலும் நற்கருத்தைக்
கன்னல் தமிழால் கவின்பெறவே கூறுதற்குப்
பாவலர் இங்கே பலர்வந்து நிற்கின்றார்
ஆவல் பெருக அருந்தமிழ்த்தேன் பெய்வார்கள்!
நல்லமைச்சு சொல்வார்; நயன்பெறவே ஆசிரிய
வல்லாண்மை கூறுவார்; வாய்மைச்சான் றோர் விரிப்பார்
நண்பர் உழவர் நறுங்காத லர்துறவி
என்னுந் தலைப்பெடுத்தே எந்தமிழிற் பாவடிப்பார்
இவ்வரிய பாவிருந்தை இங்கிருக்கும் பாவலர்கள்
ஒவ்வொருவ ராய்ப்படைப்பார் உண்பீர்! அவர்நாவில்
தவ்வி அமர்வாளெந் தாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/27&oldid=1447630" இலிருந்து மீள்விக்கப்பட்டது