பக்கம்:கனிச்சாறு 8.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  15

- என்றே ஆரியப் பார்ப்பன முதலைகள்
பாரதி தாசனார் பாடிக் குவித்த
இலக்கக் கணக்கான பாடலை எல்லாம்
திட்ட மிட்டுப் பரவாமல் தடுத்தன.
தில்லிக் கவைதாம் தெரியா திருக்கக்
கொல்லைக் கதவை இறுக்கிப் பூட்டின!

இருபதாம் நூற்றாண் டெல்லை வரைக்கும்
பாரதி யாரே ‘மகாகவி’ என்று
காவடி எடுத்துக் ‘காழ்காழ்’ என்றன.
பாரதி யாரைநாம் பழித்திட வில்லை;
பாரதி யாரை, நாம் பகைக்கவும் இல்லை!
பாரதியார் ஒரு பார்ப்பனன் என்பதால்
பாரறி யும்படி செய்தனர் பார்ப்பனர்,
அப்படிச் செய்திட ஆரியப் பார்ப்பானுக்
கெப்படி முடிந்தது என்கின் றீர்களா?
செப்படி யாட்டம் குறளி மாயங்கள்
அவன்அறி வானா? என்கின் றீர்களா?

அப்படி ஒன்றும் அறிவிலான் அலன்அவன்!
இப்படிப் பட்ட அறியாமை யெல்லாம்
தமிழனுக் கிருக்கும் தாழிட்ட சொத்துகள்!
பார்ப்பான் திறமையோ தனிப்பட்ட திறமை!
ஆர்ப்பரிப் பென்பதோ அணுவிருக் காது!
கொப்படிக் குரங்காய்க் குந்தி யிருப்பான்!
இப்படிப் பட்டதோர் நிலையெதிர்ப் பட்டால்
தப்படி யாக அடித்துத் தள்ளுவான்.
கடுகைக் குன்றெனக் கதைத்துத் தள்ளுவான்.
குன்றைக் கடுகெனக் குறைத்துக் காட்டுவான்.
தரையில் கிடப்பதைத் தலைமேல் வைப்பான்.
தலைமேல் வைத்ததைத் தரையில் கிடத்துவான்.

பொய்யும் புரட்டும் போட்டுக் கலந்து
செய்வதை எல்லாம் செய்துவிட் டிதுதான்
தெய்வத் திருவுளம் எனச்சொல்லி நம்மை
நம்பவும் செய்வான்; தான்நம்ப மாட்டான்;
வெம்பச் செய்வான் இனத்தையும் மொழியையும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/29&oldid=1447633" இலிருந்து மீள்விக்கப்பட்டது