பக்கம்:கனிச்சாறு 8.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 கனிச்சாறு - எட்டாம் தொகுதி

தன்னறிவும் தன்திறனும் அல்லால் துணையில்லை
முன்னறிவும் உண்டெனினும் உட்பகையும் மூள்வதுண்டாம்!
ஏதோ முனைந்துவிட்டோம்! ஏதோ இணைந்து விட்டோம்!
காதோடு காதாகக் கசமுசப்புக் கேட்டாலும்
ஒன்றுபட்டு விட்டோமென் றூர்முழங்க வந்து விட்டோம்!
நன்றுபட வாழ்வோம்நாம்; அல்லால் நயந்திரவோம்!

எங்களுடை வாழ்வும் இனிமேல் வருஞ்சிறப்பும்
தங்குதமிழ் ஒன்றே! தனித்துணையும் அஃதொன்றே!
எங்கள் தனிக்குலமும் எங்கள் பெரும்புகழும்
மங்காத் தமிழ்ஒன்றே! மாயாத வாழ்வதுவே!
அந்தத் தமிழே அனைத்துச் சிறப்புக்கும்
உந்துகின்ற வல்விசையாய், ஊறும் அரத்தமாய்
நாடி நரம்பாய், நலமிக்க ஊன்தசையாய்
ஆடி அசைக்கும் அரசாணைக் கொம்பொலியாய்
வீற்றிருக்கக் காண்கின்றோம்! வேறியக்கம் கண்டதில்லை;

மாற்றுரைகள் கேட்டதில்லை! மண்ணில்வே றாக்கமில்லை;
வாழ்க்கைவே றில்லை; வளத்துக்கு வாய்பிளக்கோம்!
பூழ்க்கைப் புகழ்ச்சிக்குப் பொக்காய்ப் பறந்துவரோம்!
செல்வம் செருப்பு! சிறப்புக்குச் செக்காகோம்!
வெல்வ துறுதி! விளை(வு)அதற்கு மேலுறுதி!
அந்த உறுதிக் கணிவகுத்த பாவலர்யாம்!
எந்தப் புகைக்கும் பகைக்கும் இடமில்லை!

எந்தமிழின் ஏற்றம் எடுத்துரைக்க வந்தோம்யாம்!
செந்தமிழின் எண்மைச் சிறப்புரைப்பார் எண்புலவர்!
இந்தவுல கத்தரையில் ஏந்தும் மொழிக்கெல்லாம்
செந்தமிழே தாய்மைச் சிறப்புப் பெறுவதுவாம்!
செந்தமிழே தூய்மைச் செழுமை பெறுவதுவாம்!
செந்தமிழே நல்லினிமை சேர்ந்து வழங்குவதாம்!
செந்தமிழே வேறு கலவாத் தனிமையதாம்!
செந்தமிழே என்றும் புதுமை சிறப்பதுவாம்!
செந்தமிழே என்றும் பழமை திகழுவதாம்!
செந்தமிழே சொல்வளமை சேர இயல்வதுவாம்!
செந்தமிழே நல்லிளமைச் செவ்வி கொழுவியதாம்!

அந்த வகையெல்லாம் அறிவும் அழகுமிகக்
கூறி உணர்வு கொளுத்துவதற்கே பாப்புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/44&oldid=1447658" இலிருந்து மீள்விக்கப்பட்டது