பக்கம்:கனிச்சாறு 8.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


தந்த கருத்தில் தாராத சிறப்புசில
காட்ட விருக்கின்றேன்; காதலினால் இஃதுரைப்பேன்
நீட்டுகின்றேன் என்றாலும் நேயமொடு கேட்க!

தாய்மை

இமிழ்கடல் நல்லுலகின் இற்றை இயல்பால்
தமிழ்க்கன்று; மங்கையர்க்கே தாய்மைச் சிறப்பில்லை.
கன்னியரும் வந்து கருத்தடைசெய் காலமிது!
மன்னுதமிழ்த் தாய்மை மறுக்கா திருப்பாரோ?

செந்தமிழ்த்தாய் வாய்த்தபெருந் தாய்மைச் சிறப்புரைக்கின்
இந்தியா ஆசியா ஏர்ந்த அமெரிக்கா
தென்கிழக்குத் தீவுகள் யாவிலுமே தேர்ந்தபசும்
பொன்கொழிக்கும் நாகரிகம் ஒன்று புலர்ந்ததுண்டே!
அக்காலம் இற்றைக்கே ஆறா யிரமாண்டு
முற்கால மாகும்! முதல்மாந்தக் கூட்டத்தின்
கற்கால மாகும்! கழிந்த சுமேரியத்தும்

பொற்பழிந்த டைகரிசு யூப்பிரடீ சாற்றிடையும்
வாழ்ந்திருந்த மக்கள் வழங்கிநின்ற பேச்சினிலே
செந்தமிழும் வாழ்ந்த சிறப்பைஎவ் வாறுரைப்பேன்.
அந்தமிழே தாயாய் அனைத்து மொழிக்கெல்லாம்
வாய்ந்ததென்று கூறும் வரலாற்றை யார்மறுப்பார்?
தாய்த்தமிழை எண்ணித் தருக்குவதால் என்னபிழை?

ஈரா யிரத்திருநூ றாண்டுக்கு முற்பட்ட
ஆரியர் வேதத்தும் சாயம், தா, முத்தென்னும்
சொற்கள் உளவென்றால் சொல்வதெவர் இல்லையென்று?
முற்கால பாபிலோன் மூத்த எபிரேயம்
நல்ல எகுபதியம் நண்ணும் அரபிமொழி
இன்னவற்றில் எந்தமிழ்ச்சொல் ஏற்றம் விளைத்த தென்றால்
அன்ன திலையென்பார் ஆர்?

(வேறு)


குப்பா என்பது ஜிப்பா என்றும்
கூலி என்பது ஒலிமா றாமலும்
ஞாலம் என்பதோ ஆலம் என்றும்
நீலம் என்பது நீலா என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/46&oldid=1447661" இலிருந்து மீள்விக்கப்பட்டது