பக்கம்:கனிச்சாறு 8.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 37


புதுமை நோக்கினால் புலர்ந்த சொற்களே!
எதுமுடி யாதென எவர்தாம் இயம்புவார்?
ஆரியப் பார்ப்பான் அப்படி மொழிந்தால்
சீர்சால் தமிழனும் சேர்ந்து மொழிவதா?


பழமை:

புதுமை என்பதால் தமிழ்மொழிப் பழமை
கதையெனக் கதைப்பதா? கதைப்பது நாமா?
ஆரியக் கதைப்புக் களவொன் றேது?
பூரியர் பொய்யைப் புராணங்கள் கூறும்.
தென்தமி ழகமே மக்களின் தொட்டில்!
அந்தமிழ் பிறந்து ஐம் பதாயிர மாண்டுகள்
ஆயின என்பதை அறிஞர்க் கறிஞர்
மொழிநூல் முதுவர் பாவாணர் மொழிவர்.
பழமைக்கும் பழமையாய்ப் பைந்தமிழ் வாழ்வதைக்
கிழமையால் தமிழ்மொழிக் கிளர்வினால் அன்று,
நுண்மாண் நுழைபுல வன்மையாற் கண்டார்!
பன்மொழி யறிஞரும் பகர்ந்த கூற்றிது.
‘உணர்ச்சி மிகுதியால் உரைப்பதால், தமிழர்
அறிவிற் குறைந்தவர்’
என்று மொழிவார்
சட்டர்சி என்னும் வடமொழிச் சார்பினார்.
திட்டமாய் அவர்க்குத் தெரிவித் திடுவோம்;
உணர்ச்சி உள்ளவர் தமிழர் என்றால்
உணர்ச்சி யற்ற உருவமா சட்டர்சி?
‘உணர்வது உடையார் முன்சொலல்’
என்று
நுணங்கிய அறிவினார் வள்ளுவர் நுவன்றது
அறிவிலை என்றே அவர்மொழி வாரா?
செறிவிலா துரைப்பது செப்பமென் பாரா?
சட்டர்சி போன்ற வடமொழி அடிமைகள்
இட்டதே சட்டம் இயன்றதே உண்மை
என்பது அரசியல் ஏற்றத்தால் வந்தது.
தின்பதற் கேதேனும் சொல்ல வேண்டுமே!

வளமை:

அடுத்தது வளமை!
வளமை என்பது தமிழ்க்கே வாய்த்ததாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/51&oldid=1447912" இலிருந்து மீள்விக்கப்பட்டது