பக்கம்:கனிச்சாறு 8.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


அளவறப் பரந்து விரிந்துயர் ஆல்போல்
அகற்சியும் விரிவும் கொண்ட தாகையால்
நுகர்ச்சி தமிழர்க்கு நுண்ணிய தெனவே
ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள்,
அருமைத் தமிழில் ஆயிரம் உண்டு!
தமிழில் உள்ள ஓரெழுத்து மொழிபோல்
இமிழ்கடல் உலகில் யாங்கணும் இல்லை.
ஏறத்தாழ அறுபத்து நான்காம்
ஓரெழுத்து மொழிகள் தமிழில் உண்டே!
ஆ, ஈ, ஐ, கா, கூ, கோ, கை, தை
மே, மூ,யா, மோ, வீ, வா, தா, வை
மா, மை, பை, தே, போ, மீ, நா, நீ

எனவரும் சொற்களை எண்ணிப் பார்மின்!
புல்லைப் ‘பிடுங்கு’ எனல், பூவைக் ‘கொய்’ எனல்
வல்ல காயைப் ‘பறி’ எனல் வழக்கு.
உலகம் அளாவிய ஆங்கிலத் துரைத்தால்
‘பிக்’ கெனும் ஒருசொலே மூவிடம் பயிலும்
திக்கெலாம் பரவிய ஆங்கில மொழியில்
காய்க்கென ஒருசொல் இல்லெனக் காண்க.
சோறாய் வெந்ததை அரிசி யாய்ச் சொல்லுவர்!
எந்தமிழ் மொழியில் சொற்சோர்வு இல்லை;
செந்தமிழ் என்றும் செழுந்தமிழ் என்றும்
கொழுந்தமிழ் என்றும் தமிழையே கூறுவர்;
யானையைக் குறிக்க முப்பத் தெண் சொல்!
ஆன ‘மது’விற்கோ அறுபது சொற்கள்!
‘சூரிய’னுக்கு இருபத்து இரண்டு!
மூரி ‘முகிற்’குப் பத்தொன் பதுசொல்!
உளை, நவிர், குடுமி, பித்தை, ஓரி
தளை, குழல், குஞ்சி, கார், முடி, தொங்கல்
பங்கி,
எனவரும் பன்னிரு சொற்களும்
தங்கும் ஆடவர் தலைமயிர் குறிக்கும்!
குருள், குழல், ஓதி, கூழை, கூந்தல்
குரல், ஐம் பாலொடு, மராட்டம், அளகம்

ஒன்பதும் பெண்டிர் தலைமுடிப் பெயர்கள்!
பின்னகம், முச்சி, கொண்டை, சிகழிகை
கொப்பம்; தம்மிலம், பந்த
மென் பனஅவர்
குழல்புனை பெயர்கள்! இன்னும் கூறுவேன்.
தும்பி, மா தங்கம், தூங்கல், கறையடி,
உம்பல், எறும்பி, வாரணம், புழைக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/52&oldid=1447914" இலிருந்து மீள்விக்கப்பட்டது