பக்கம்:கனிச்சாறு 8.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


ஆறிப் போயிற்றுப் பாலும்!
அழகு குன்றின முப்பழத் தோலும்!
வாடின கட்டிலில் மலர்வகை நாலும்!
கண்விழிக்க எவ்வாறு ஏலும்!
மேலும்!
மேலும்!


எத்துணை இனிய சொற்கள்?
எத்துணை எளிமை பாட்டில்!
எத்துணைக் கருத்துத் தேட்டம்!
எத்துணை நயங்கள்! இன்பம்!
எத்துணை யளவு கல்வி
யறிந்தவர் எனினும் பாட்டை
எத்துணை எளிதாய்ப் பாடி
இலக்கிய இன்பம் காண்பார்?
புலமக்கள் கண்ட இன்பம்
பொதுமக்கள் காணு மாறு
சிலபல சொற்க ளாலே
செய்தவர் பாவின் வேந்தர்!
இலைஇலை என்பார்க் கின்னும்
எடுத்தெடுத் தீவேன்; ஆனால்
நிலையிலை நேரம்; ஆக
மொழித்திறம் நிறுத்து கின்றேன்.

அடுத்தது புரட்சி யுள்ளம்!
பாவலர்க் கதுதான் நற்பேர்
கொடுத்தது; அவர்க்கும் பீடு
கொடுத்தது! தமிழ்ச்செம் மாப்பால்
எடுத்தது; நேற்றும் இன்றும்
இருக்கின்ற புலவர் யார்க்கும்
மடுத்திலாப் பெரிய செல்வம்!
மற்றதன் சிறப்பைப் பார்ப்போம்!

‘விடுதலை பெறுவது முதல்வேலை!

அடி மையில் உழல்வது முடியாது!

விழிதுயில் வதுமிகு தவறாகும் - எழுவீரே!’

‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/84&oldid=1448062" இலிருந்து மீள்விக்கப்பட்டது