பக்கம்:கனிச்சாறு 8.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

நன்றாய்ச் சிரிப்பதற்கே நாம் பிறந்தோம்; நல்லபடி
என்றும் சிரித்தே இருப்போம்; மகிழ்ந்திருப்போம்!

ஆனாலும் சொல்லுகிறேன்; அன்புடைய மாணவரீர்!
தேனும் தினையும் தெவிட்டுகின்ற செந்தமிழை -
செந்தமிழ் நாட்டைச்
- சிறிதே நினையுங்கள்!
எந்தமிழ மாந்தர் இருக்கும் நிலையறிந்தால்
இக்கால் நகைத்திருக்க ஏது இடம்? கல்வியினால்
முக்காலும் நல்லபயன் மூண்டிருக்க வேண்டாவா?

கொஞ்சம் உமைமறந்து, என் கூடவரு வீர்களெனின்,
பஞ்சம், பசித்துயரம், பாடுபட்டும் உண்ணாமல்
உள்ளொடுங்கிப் போன உலர்வயிறு, கூன்முதுகு,
முள்ளெழுந்து நின்றதுபோல் மொய்த்த தலைமயிர்கள்
சப்பைத்தோள், வெள்ளெலும்பு, சாறுபிழிந் திட்டவுடல்,
குப்பைமேல் வாழ்க்கை, குழந்தையெனும் கொத்தவரைப்
பிஞ்சுகளைத் தாம்சுமந்த பீற்றைச் சடலங்கள்,
குஞ்சு குளுவான்கள், குந்தவழி யில்லாமல்,
சாலையோ ரத்தும், சகதியிலும், பொட்டலிலும்,
ஆலையிலே நுண்பஞ் சலைவதுபோல் தாம்அலைந்து,
வாழாமல் வாழ்ந்திருக்கும் வாழ்க்கையினைக் காட்டிடுவேன்!
சூழாமல் சூழ்ந்திருக்கும் கொல்வறுமை என்சொல்வேன்?

உண்ணுவதோ கூழ்தான்! உடுத்துவதோ கந்தைதான்!
எண்ணுவதே இல்லை; எதிர்ப்படுவ தெண்ணுவது!
தின்னுவதில் ஆவலில்லை; தென்படுவ தின்பதுதான்!
என்னயிது புன்வாழ்க்கை என்னும் சலிப்பில்லை!
வாழ்ந்திருக்க ஆசையில்லை; வாய்ந்திருக்கப் பாசமில்லை!
சூழ்ந்திருக்கும் இவ்வுலகம் சுற்றுவதா? நிற்பதுவா?
தட்டையா? இல்லை, தனியுருண்டை யா வென்னும்
நெட்டை நினைவில்லை; ஏதோ நிலத்திடையில்
வந்து பிறந்துவிட்டார்; வாழ்கின்றார்! தீம்பசிக்கு
வெந்ததுவோ? வேகா ததுவோ? விழுங்கிவிட்டால்
நல்ல நிழலோ? நடுத்தெருவோ? தூக்கந்தான்!
கல்லொன்றோ, கையோ, தலைக்கு; கருத்திருந்தால்!
இன்னவர்கள் எங்கோ இருப்பாரென் றெண்ணாதீர்!
அனைவரும் நம்மிடைதான் அன்றாடம் வாழ்கின்றார்!
இத்தகைய காட்சிகண்டே, இப்புறமாய் நாம் நகர்ந்தால்
மெத்தைகள், மாடிகள், மேன்மாட மாளிகைகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/92&oldid=1448095" இலிருந்து மீள்விக்கப்பட்டது