பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கன்பூசியஸின்

8


இவ்வளவு அரிய திறன்களை எல்லாம் தனது அறிவு எனும் தோளிலே சுமந்த கன்பூசியசின் லட்சியம் தான் என்ன? என்று கேட்கிறீர்களா?

வேறோன்றும் இல்லை. நமது சங்ககாலக் கவிஞனான பூங்குன்றனார் கண்ட கனவான, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தை நனவாக்கிட, "ஒரே உலகம், ஒரே மனித சமுதாயம்"; ஒரே பொது ஒழுக்கம் என்ற பெயர் சூட்டி அதற்காக அயராமல் உழைத்தவர்தான் கன்பூசியஸ்!

உலகம் முழுவதற்கும் ஒரே ஒழுங்கு ஒரே பொது நெறி; என்ற உலகப் பொதுநல சமுதாயம் அமைக்கவும், அந்த சமுதாயத்தில் தன்னலமற்ற தனி மனிதன் பொது மகனாக வாழவும், அன்புவழியில் அனைவரிடமும் சமத்துவ சகோதரத்துவப் பாசத்தோடு, அற நெறிகளைப் பின்பற்றிப் பழகவும், மனிதத்தன்மையைப் பன்படுத்தி வளர்ந்து இயற்கையோடு இணைந்து, முழு மனிதனாக வாழ்வதும் தான் அந்த உலக சமுதாயத்தின் இலட்சியம் என்பதைச் சீன மக்களுக்கு எடுத்துக்காட்டியவர் கன்பூசியஸ்.

★ அன்பு வழிதான் எனது மதம்!
★ அதன் அறநெறிகள்தான் எனது வேதம்!
★ மனித தத்துவம்தான் அதன் ஆத்துமம்!
★ அதற்குரிய சமுதாயப் பண்பாடுதான் அதன் திருக்கோயில்!
★ அந்தப் பண்பாடுகளுக்குரிய வழிபாடுதான் பூசை விதி!
★ அப்பூசைக்குரிய பக்தியுள்ளம்தான் பிரார்த்தனை!
★ இவற்றால் பேறுகின்ற பேரின்பம் தான் முக்தி நிலை.