பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

53


இயற்கையையும் தம் வசப்படுத்தக் கூடிய ஓர் ஆத்மீக சக்தி நம்மிடம் இருக்கின்றது என்ற உணர்வைத் தூண்டி, மனித சக்தியை மிக மிக உன்னத நிலைக்கு உயர்த்தி விடுகின்றது.

வானகத்தின் விதிகளில் இருந்து மனிதனில் விதி பிரிந்து நிற்க முடியாது. இந்த நியதிக்கு மாறாகச் செல்லும் போதுதான், உலகத்திற்குப் பேரழிவும், பெருந் துன்பங்களும் உண்டாகின்றன.

பயங்கரச் சம்பவங்கள், துயரங்கள் துன்பங்கள், துர்ப் பாக்கியங்கள் எல்லாம் துன்புறும் உலகின் எச்சரிக்கைக் குரல்களே ஆகும். ஒழுங்கை மீட்க வேண்டும் என்றும், சரியான பாதைக்குத் திரும்பிட வேண்டுமென்றும், மனிதனை அவை அறைகூவி அழைக்கின்றன.

மக்களின் பொதுநல வழியில் எதுவும் தடையாக நிற்காமல் காப்பதுதான் ஞானமகான் கன்பூசியசின் தத்துவக் கவசம். இந்த வகையில் பார்த்தால், அவர் மக்களின் அன்பராக, ஒரு புதுமையான ஜனநாயகவாதியாகவும் திகழ்கின்றார்.

உலகம் முழுதும் உள்ள மனிதன், சகமனிதன் ஆகியோர் பெறவேண்டிய உறவு பற்றிய இவருடைய ஞானம், அன்பு வழியே, அறநெறிகள் படியே உலக மனித சமுதாயம் அமைய வேண்டும், என்ற கன்பூசியஸ் கருத்தும், மனிதனும் இயற்கையும் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற அந்த மகானின் சிந்தனையும் அரசியல் தத்துவத்திற்குக் கிடைத்த பெரும் பேறுகளாகும்.