பக்கம்:கபாடபுரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கபாடபுரம்


அமைத்திருந்தார். கோ நகரத்தை நெருங்கும் வெளியூர்ச் சாலைகளிலிருந்தும், கடல் வழிகளிலிருந்தும் நீண்ட தொலைவிலேயே இந்த ஒளிமயமான கபாடங்கள் வானளாவிய கோட்டை மதில்களுடன் கம்பீரமாய்த் தெரியும். இந்தக் கபாடங்களின் நெருப்பு நிறம் அருணோதயத்தின் பொன் வெயில் பட்டுத் தகதக வென்று மின்னும்போது தொலைவிலிருந்து காண்பதற்குப் பேரழகு நிறைந்ததாயிருக்கும். மணலூர் புரத்துச் சோலைகளில் நாணி வெட்கி நகுவது போல் அழகாயிருக்கும் பொருநை நதிப் பூவை கபாடபுரத்தைச் சுற்றித் தழுவி மணப்பதுபோல் வந்து பெருமிதமாகக் கடலில் கலக்கிறாள்.

சில காதப் பரப்புக்கு விரிந்து பரந்திருந்த கபாடபுரநகரின் ஒரு மருங்கில் பொருநையும் மறு மருங்கில் நெடுந்துாரத்துக்கு நெடுந்துரம் நீலநெடுங்கடலுமாக அமைந்திருந்தபடியால் - மிக ஆழமாயிருந்த பொருநை முகத்துவாரத்தின் வழியே சிறு கப்பல்களும் பாய்மரப் படகுகளும் வந்து நிற்கும் துறை ஒன்றும் மறுபுறம் கடலில் மாபெரும் வெளி நாட்டு மரக்கலங்கள் வந்து நிற்கும் பெருந்துறைமுகம் ஒன்றுமாக இருந்தன. தென்கடலிலும், கீழ், மேல் கடல்களிலும் அங்கங்கே இருந்த சிறு தீவுகள், பெருந்தீவுகளுக்குப் போகும் பயணமரக்கலங்கள் எல்லாம் பொருநை முகத்துவாரவழியே வந்து போகும். அவற்றுக்குச் சுங்கச் சாவடிகள் முதலியன இல்லை. கடல் முகத்துறையிலோ - பல சுங்கச்சாவடிகளும் காவலர்களும் உண்டு. கிழக்கே பொருநையும், தெற்கும், மேற்கும், கடலும் இயற்கை அகழிகளாக இருந்ததனால் வடக்கு நோக்கி விரியும் நிலவெல்லையில் ஒரு பகுதி மட்டும் பொருநைக் கால்வாய் ஒன்றின் மூலம் சிறிது தொலைவு ஆழமான அகழி வெட்டி நீர் நிரப்பப் பட்டிருந்தது.

சுற்றிலும் அகழிக்கரையில் அடர்த்தியாக ஞாழல் மரங்கள் - குங்கும நிறத்தில் சரம் சரமாகப் பூத்திருப்பதைக் காணக் கண்கோடி வேண்டும் போலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/12&oldid=489911" இலிருந்து மீள்விக்கப்பட்டது