பக்கம்:கபாடபுரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கபாடபுரம்


என்று பார்க்காமல் நெஞ்சுக் குழியை நோக்கி வாளைப் பிடிப்பது அவர்கள் இயல்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளோ கருவிகளோ இன்றி வந்திருக்கும் நாம் இருவரும் பலராகக் கூடி நிற்கும் அவர்களிடம் போய்ச் சிக்கிக் கொள்வது நல்லதென்றா நினைக்கிறீர்கள்?"

"எப்படி இருந்தாலும் இதைத் தடுத்தாக வேண்டும். அதற்கு வழி சொல் எந்த வணிகரின் முத்துக்களாயினும் அவை நமது கடலில் விளைந்தவை. அவற்றை நாம் கொள்ளைபோக விடக்கூடாது" - என்று மனம் குமுறிப் பிடிவாதமாகப் பேசினான் சாரகுமாரன்.

"இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! இந்த இடத்தில் அதற்கு வாய்ப்பு உண்டா இல்லையா என்பதை இதோ, பார்த்துச் சொல்லிவிடுகிறேன்" - என்று விதியின் எதிர்ச் சாரியில் வானளாவ மறித்துக் கொண்டிருந்த கோட்டை மதிற்க வரை நிமிர்ந்து பார்த்தான் முடிநாகன். அப்படிப் பார்த்த மறுகணமே அவன் முகம் மலர்ந்தது. கண்களிலும் நம்பிக்கை ஒளி வந்து நிறைந்தது. மேலே கோட்டைப்புற மதிற்கவரின் உச்சியைப் பார்த்தபின் திருப்தியோடும் நம்பிக்கை நிறைந்த குரலிலும் இளையபாண்டியரை நோக்கிக் கூறலானான் முடிநாகன் :

"ஒரு வழி இருக்கிறது குமாரபாண்டியரே! இந்த இடத்தில் இப்போது இந்த அகால வேளையிலே நமக்குப் பயன்படக்கூடிய உதவி அது ஒன்றுதான். நாம் அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமலே அவர்கள் நம்மிடம் பயந்து ஒடும்படி செய்ய வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை. என்னோடு தயை செய்து தாமதமின்றி உடனே நான் கூப்பிடுகிற இடத்துக்குக் குமாரபாண்டியரும் வரவேண்டும்."

"இத்தனை அவசரமாக என்னை எங்கே அழைக்கிறாய் முடிநாகா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/58&oldid=489979" இலிருந்து மீள்விக்கப்பட்டது