பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கபோதிபுரக்


என் இருதயத்தில் ஆழப்பதிந்தது. அதனைப் பின்னர் அழிக்க யாராலும் முடியவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் தடவை ‘அரகரா சிவசிவா அம்பலவாணா’ என்று சொல்லிப் பார்த்தேன். உன் கவனம் மாறவில்லை. தில்லை, திருவானைக்காவல், காஞ்சி எனும் தலங்களெல்லாம் சென்றேன். என் ‘காதல்’ கரையவில்லை. எப்படிக் கரையும்! ‘உமை ஒரு பாகன்’, ‘இலட்சுமி நாராயணன்’, ‘வள்ளி மணாளன் முருகன்’, ‘வல்லபைலோலன்’ என்றுதான் எங்கும் கண்டேன். நான் தேடிய உமை நீ தானே!” என்று பரந்தாமன் பேசிக்கொண்டே இருந்தான்.

கேட்கக் கேட்க சாரதாவின் உள்ளம் தேன் உண்டது. ஆனாலும், கடுமையான அம்மையின்போது பேசி உடம்புக்கு ஆயாசம் வருவித்துக் கொள்ளக்கூடாதே என்று அஞ்சி, “பரந்தாமா போதும் பிறகு பேசுவோம், உன் உடம்பு இருக்கும் நிலைமை தெரியாது பேசிக்கொண்டிருக்கிறாயே” என்று கூறி சாரதா அவன் வாயை மூடினாள்.

“உடம்பு ஒன்றும் போய்விடாது. போனாலும் என்ன? உன்னைக் கண்டாகிவிட்டது. உனக்கு இருந்துவந்த ஆபத்தைப் போக்கியுமாகிவிட்டது. இனி நான் நிம்மதியாக...” என்று கூறி முடிப்பதற்குள் சாரதா மீண்டும் அவன் வாயை மூடி, “அப்படிப்பட்ட பேச்சு பேசக்கூடாது. நான் சாகலாம், ஆனால் உங்களுக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்கலாகாது” என்று கூறினாள். சாரதாவைக் கண்ட ஆனந்தம் அவளிடம் பேசியதால் ஏற்பட்ட களிப்பு பரந்தாமனின் மனத்தில் புகுந்தது. அயர்வு குறைந்தது. பேசிக்கொண்டே கண்களை மூடினான். அப்படியே தூங்கிவிட்டான். அவன் நன்றாகத் தூங்கும் வரை பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தாள் சாரதா. மெல்ல குறட்டை விட்டான் பரந்தாமன், சாரதா மெதுவாக எழுந்தாள். தாயை அழைத்தாள்.