பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

23

வியாபார வேட்டைக் காடாகவே என்றென்றும் இருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டிருப்பவர்.

ஆனால், இந்த வெள்ளை முதலாளியின் எஜமான மனப்பான்மையை வேரறுக்க எண்ணிய சிதம்பரனார், 1906-ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்தார். இந்த வியாபார நிறுவனத்துக்கு உதவியாகச் சில சிறு வியாபாரிகள் தங்களாலான உதவிகளைச் செய்தார்கள்.

தமிழர்களிலேயே சிலர் வெள்ளையனை எதிர்க்க முடியுமா என்று சிதம்பரனாரைக் கேலி செய்தார்கள். மலையை மடுவு எதிர்க்க இயலுமா? முயலுக்கேன் வீண் வேலை முள்ளம் பன்றியுடன் மோத என்று எகத்தாளமிட்டார்கள். வேறு சிலர், சிறு உளிதான் மலையைப் பிளக்கும் ஆயுதம்! சிதம்பரம் அஞ்சாதே துணிந்து செய். எம்மாலான உதவிகளை இயன்றவரைச் செய்கிறோம் என்று அவரது மனதுக்கு உரம் போட்டார்கள். எவர் என்ன பேசினாலும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட சிதம்பரம், முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்ற மனதிடத்தோடு கப்பல் நிறுவனத்தை நிறுவிட அரும்பாடுபட்டார்.

1906-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினாறாம் தேதியன்று சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. கப்பல் கம்பெனியின் தலைவர் பொறுப்பை மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்தவருமான பாண்டித்துரைத் தேவர் ஏற்றார். சிதம்பரனார் அந்த நிறுவனத்தின் செயலாளர் ஆனார்.