பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.உ.சிதம்பரம்
59
 

சிதம்பரம் பிள்ளைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வெள்ளையர் பத்திரிகைகளும் வெறுத்து எழுதின. எடுத்துக்காட்டாக, ‘ஸ்டேட்ஸ்மன்’ என்ற ஆங்கில ஏடு, ‘தேச பக்தர் சிதம்பரனாருக்கு அளிக்கப்பட்ட தண்டனை நியாயத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமானது. சிதம்பரம் பிள்ளையின் தியாகம் மிகப் பெரிய சக்தி வாய்ந்தது’ என்றது.

‘ஸ்டாண்டர்டு’ என்ற மற்றொரு ஏடு, நீதிபதி பின்ஹேயையே கடுமையாகத் தாக்கியது.

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கேட்ட ஆந்திர தேசபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆங்காங்கே ஆந்திரப் பகுதிகளில் கண்டனக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் கணக்கின்றி நடத்திக் கண்டித்தனர்

அப்போது பெஜவாடா என்றும், இப்போது விஜயவாடா என்றும் அழைக்கப்படும் பெரும் நகரிலே இருந்து வெளிவரும் ‘சுயராஜ்யா’ என்ற தெலுங்கு வாரப் பத்திரிக்கை; பின்ஹேயின் சிறுமைத் தீர்ப்பைக் கண்டித்து மிகக் காரசாரமாகத் தலையங்கம் எழுதியது.

அந்தத் தலையங்கம், மக்களிடையே பலாத்காரத்தைத் தூண்டி விடுவதாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டி பத்திரிக்கை அலுவலகத்தையே பூட்டி சீல் வைத்துவிட்டார்கள் வெள்ளையர் போலீஸ் அதிகாரிகள். அந்த தலையங்கத்தை எழுதிய ஆசிரியருக்குக் கடுமையான தண்டனையை வெள்ளையர் அரசு அளித்தது.

மகாகவி பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ என்ற தமிழ் வார இதழுக்கும் அதே நிலை ஏற்பட்டது.