பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

; : 17 : நிலவி வந்த பல இராமாயண நூல்களின் பாடல்களின், மக்களின் செவி வழிச் செய்திகளின், நாட்டுப்புறப்பாடல் குறிப்புகளின், நாடகங்கள், கூத்துக்கள் முதலியவற்றின் கதை ஆதாரங்களையும் எடுத்துக் கொண்டு, சிறந்த முறையில் தனது காவியத்தை அமைத்துள்ளார் என்பதையும் காணலாம். "இவ்விராமாவதாரத்தில் கம்ப நாடர், முக்கியமாக வான்மீகத்தையே தமக்கு முதலனுாலாகக் கொண்டவரேனும் வடமொழியினும் தமிழினும் அமைந்த மற்ற இராமாயணங்களையும் ஆராய்ந்து தழுவிக் கதையமைத்துக் கொண்டவரேயாவர்" என்று பேராசிரியர் மு. இராகவையங்கார் தனது ஆராய்ச்சித் தொகுதி என்னும் நூலில் குறிப்பிடுகிறார். எனவே, கம்பன் தனது "இராமாவதாரம் என்னும் மகா காவியத்தைப் பாடும் போது தனது முந்திய பல வேறு இராம கதைகளையம் ஆதாரமாக எடுத்துக் கொண்டார் என்பது தெளிவாகிறது. எனவே, கம்பர், ஏற்கனவே பாரத நாட்டு மக்களிடத்தில் பிரபலமடைந்திருந்த ஒரு மக்கள் கதையைத்தன் தமிழ்ப்புலமை, செழுமையான கருத்துச் செறிவுமிக்க சொல்லாற்றல், இலக்கியவளம், மனித முன்னேற்றத்திற்கான சிறந்த கருத்துக்கள், பாரதத்தின் நீண்ட பாரம்பரியம், பண்பாடு, வரலாற்றுச் சிறப்புகள், பாரத நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு, சமயநெறி, தனது ஆழ்ந்த திருமாள் பக்தி, இராமபக்தி மூலம் தனக்கே உரித்தான தனித்தன்மைகளடன் தனது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற வகையில் இன்னும் தனது காலத்தையும் கடந்து நெடிது நோக்குடன் பல அரிய கருத்துக்களையும் இணைத்து மிகவும் பிரபலமாக, தமிழில் ஒரு உன்னதமான மகா காவியத்தை இயற்றியுள்ளார் என்பது பாரத நாட்டின் தொண்மையான இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. கம்பன் தனது மகா காவியத்தில் பல இடங்களிலும் தமிழின் சிறப்புகளையும், தமிழ்த் தொடர்பான பாத்திரங்களையும், வரலாற்று சிறப்பகளையும் இடங்களையும், நாடுகளையும், ஆறுகளையும் அவைகளின் சிறப்புகளையும் வெளிப்படுத்திப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.