பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

:: 6: : காப்பியங்களும் இராமாவதாரப்பெருமைகளைப் பற்றிக் கூறுகின்றன. அந்த நிலையில் கம்பன் தான் எழுதிய இராம காவியத்திற்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். கம்ப நாடார், இராமபிரானுடைய அவதாரச்சிறப்புகள் பற்றி பல இடங்களிலும் மிகவும் உயரவாகக் கூறுவதைக் காண்கிறோம். கம்பன் மற்றும் வால்மீகி வாழ்ந்தகாலம், அவர்களின் காவியத்தில் அவர்களுடைய காலத்தின் பதிவுகள் பற்றி ராஜ கோபாலாச் சாரியர் அவர்கள் தனது சக்கரவர்த்தித்திருமகன் (இராமாயணம்) நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "வால்மீகி பகவான் இராமாயணம் பாடிய காலமும் சிவராமச்சந்திரன் அவதரித்து இம்மண்ணுலகிள் வாழ்ந்த காலமும் என்றே என்பது புராணம் வாசிப்பவர்களுடைய பரம்பரைக் கொள்கை" என்றும், "வால்மிகி ரிஷியின் காவியத்தில் இராமருடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும் இங்கு மங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதார விஷயத்தைச் சொல்லி வந்தாலும் மொத்தத்தில் வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் இராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன், வீரபுருஷன், அபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன், அம்மட்டே, கடவுளாக வேலை செய்யவில்லை"என்றும், இன்னும், "வால்மீகி முனிவரின் காலத்திலேயே ஸ்ரீ ராமனைப் பற்றிய அவதாரக் கொள்கை ஓரளவு ஜனங்களின் மனதில் இருந்து வந்தது. வால்மீகி இராமாயணம் இயற்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கம்பரும் துளவி தாசரும் ராமாயணம் பாடினார்கள். இதற்குள் ஸ்ரீ ராமன் மகா விஷ்ணுவின் அவதாரமே என்பது நாட்டில் நன்றாக ஊர்ஜிதப்பட்டுப் போன கொள்கையாகிவிட்டது. ராமன் என்றாலும் கிருஷ்ணன் என்றாலும் மகாவிஷ்ணுவே. மகாவிஷ்ணு என்றால் ராமனே - கிருஷ்ணனே. இந்த நிலைக்கு ஜனங்களின் கொள்கை வந்துவிட்டது. இதற்கு ஏற்ப, பக்தியும் கோயில்களும் வழிபாடும் ஏற்பட்டு ஸ்திரமாகிவிட்டன" என்றும்,