பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 99 இத்துணைப் பேராற்றலும் பெருஞ்சினமும் உடையவனாகிய இலக்குவன் இராமனின் நிழல்போல் உறைந்தவன் என்பதை அனைவரும் அறிவர். என்றாலும், இலக்குவனின் கைங்கரியப் பெருமிதம் புலப்படுகின்ற நிகழ்ச்சி மிகவும் நெகிழ வைப்பதாகும் என்பதை நினைதல் வேண்டும். யமுனை ஆற்றில், குகன் முதலானவர்களுடைய உதவி எதுவும் இல்லாத நிலையில், மூங்கில் கழிகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, மாணைக் கொடியால், தெப்பமாகக் கட்டி அதில் பிராட்டியையும், பெருமானையும் ஏற்றிவைத்து அக்கரைக்குத் தன் இரு கையால் இழுத்துக்கொண்டு நீந்திப்போகிறான். அதைப் பார்த்து இராகவன் தழுதழுத்து விடுகின்றான். அக்கரைக்குச் சென்றால், அங்கே ஒரு தவச்சாலை, பிராட்டியும் பெருமானும் தங்குவதற்குத் தயாராய் இருக்கிறது. இலக்குவனால் கட்டப்பட்டிருந்த அந்தத் தவச்சாலையைப் பார்த்த இராகவன் தம்பியை ஏற இறங்கப் பார்த்து, "என்று கற்றனை நீ இதுபோல்" (2096) "தம்பி, ஒரு வினாடிகூட என்னை விட்டுப் பிரிந்தவன் இல்லையே! நீ எங்குக் கற்றாய் இதனை” என்று இராகவன் தழுதழுத்துப் பேசுகின்றபோது அண்ணன் தம்பியிடையே இருக்கின்ற எல்லையற்ற அன்பின் பரிமாணத்தைக் காண முடிகின்றது. மிதிலையர் கோன் மகள் பாதம் காட்டில் நடந்தன; குற்றமே இல்லாத என் தம்பியின் கை இந்தத் தவச்சாலையை அமைத்தன. ஒன்றுமே இல்லாதவற்குக் கிட்டாத பொருள் இல்லை என்று இராகவன் பேசுகின்றான். "மேவு கானம் மிதிலையர் கோன் மகள் பூவின் மெல்லிய பாதமும் போந்தன; தா இல் எம்பி கை சாலை சமைத்தன - யாவை யாதும் இலார்க்கு இயையாதவே" (2095)