பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கம்பன் எடுத்த முத்துக்கள் சூடாமணியைப் பெற்றுக் கொண்ட அனுமன் இராமனிடம் செல்வதற்குமுன்னர் எப்படியாவது இராவணனைப் பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறான். முன்பின் தெரியாத இடத்தில் சிறிய உருக் கொண்டு இவ்வளவையும் சாதித்த அனுமன். இராவணனைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான். அது நடைபெறுகிற காரியம் அன்று. தேவர்கள் முதலாயினோரும் அவனைக் காணமுடியா தென்றால் குரக்கு வடிவிலிருந்த ஒருவன் அவனைக் காணவேண்டு மென்று சென்றால், அவன் விருப்பத்தைக் கேட்பவர்கள் எள்ளி நகையாடுவார்களே தவிர, இலங்கை வேந்தனைச் சந்திக்க வழி செய்ய மாட்டார்கள். எனவே, அனுமன் தனக்கு உரிய முறையில் சிந்தித்து ஒரு முடிவிற்கு வருகிறான். பழந்தமிழ் மன்னர்கள் காலத்தில் கடிமரம் என்பது எவ்வளவு பாதுகாப்பிற்குரியதாக இருந்ததோ அதே நிலையில் இராவணன் அசோகவனத்தை வளர்த்துவந்திருக்கிறான். அவன் வந்து தங்கி மகிழ்வதற்காகச் சயித்தியம் என்ற மணி மண்டபத்தையும் கட்டியிருந்தான். எனவே அசோகவனத்தை அழித்தால் நிச்சயமாக இராவணனைச் சந்திப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் (5435) என்று கருதிப் பொழிலை அழிக்கத் தொடங்கினான். இது ஆறாவது படலமாகும். - - அடுத்து நிற்பது கிங்கரர் வதைப் படலமாகும். தனியொரு குரங்கு எனப் பகையைக் குறைத்து மதிப்பிட்ட இராவணன் கிங்கரர்களை ஏவுகிறான். அவ்வாறு குறைத்து மதிப்பிட்டான் என்பதை அவன் இட்ட ஆணையே விளக்குகிறது. ஏதோவொரு சாதாரணக் குரங்கைப் பிடிக்கப் போகின்றவர்களை அதை அடித்து நசுக்கிவிடாமல் அதைத் தன்னிடம் கொண்டு வரவேண்டும் என்று கூறுவது போலப் பேசுகிறான்; ... "வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை - மாற்றி, கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்திர்" (5490)