பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 223 : "என்னையே நோக்கி நான் இந் நெடும்பகை தேடிக்கொண்டேன்” என்றும், "சீதையை விடுவது உண்டோ?. இருபது திண்தோள் உண்டால்” (9124) என்றும் பின்னர்ப் பேசுகின்ற இராவணனின் தன்னம்பிக்கை, தன் ஆற்றல்பற்றிய தன்னம்பிக்கையாக இல்லாமல், அகங்காரத்தால் விளைந்த தன்னம்பிக்கையாக இருப்பதைக் கண்டோம். மிதமிஞ்சிய அத் தன்னம்பிக்கை சிந்திக்கும் அவனுடைய ஆற்றலைத் தடுத்துவிடுகின்றது. அதன் பயனாகப் பகையைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டான். மாற்றான் வலியைக் குறைத்து மதிப்பிடுதல் வீழ்ச்சியின் முதற்படி யாகும். அவன் நியமித்துள்ள இலங்காதேவியின் கட்டுக்காவலை அவன் அறிவான். கோட்டைக் காவல், உள்நகர்க் காவல் இத்தனையும் மீறி ஒரு குரங்கு வந்து, கண்ணின் மணிபோல் அவனால் காக்கப்படுகின்ற அசோக வனத்தையும் அழித்தது என்றால், அது ஒரு சாதாரணக் குரங்காக இருக்கமுடியாது என்பதைப் பெருவீரனாகிய அவன் சிந்தித்திருக்க வேண்டும். அவனுடைய அகங்காரம் அவன் கண்ணை மறைத்துவிட்டது. எனவேதான், இவ்வளவு அலட்சியத்துடன் குரங்கைக் கொல்லாமல் கொணர்க என்று ஆணையிடுகிறான். யோசனை யற்ற இந்த ஆணையின் முடிவு உடனே தெரிந்துவிட்டது. இவர்களாவது சாதாரண வீரர்கள். பெருவீர னாகிய சம்புமாலியும் வந்து அழிகிறான். தனிப்பட்ட தேர்ச்சி பெற்ற பஞ்ச சேனாதிபதிகள் அடுத்து வந்து அழிகின்றனர். அதனைப் பஞ்ச சேனாபதிகள் வதைப் படலத்தில் கவிஞன் விளக்குகின்றான். சேனாபதிகள் அழிந்தபோதாவது இராவணன் சிந்தித்திருக்க வேண்டும். இந்திரசித்தன் தம்பியாகிய தன் இளைய மகன் அக்க குமாரனை அனுப்புகிறான். அக்க குமாரனும் வதைப்பட்ட பிறகு இராவணன் தான்ே போருக்குக் கிளம்புகிறான். அவனைத் தடுத்து நிறுத்திய இந்திரன் பகைஞனும் பெரும் படையுடன் புறப்படுகிறான். அப்படிப் புறப்படுவதற்கு முன்னர்த் தந்தையிடம் பேசிய பேச்சுகள் இவ்விருவரையும் ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன. இராவணன் ஆற்றலில் எள்ளளவும் குறையாத ஆற்றலைப் பெற்றுள்ள இந்திரசித்தன் தந்தை செய்த தவற்றைத் தான் செய்ய முனையவில்லை.