பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கம்பன் எடுத்த முத்துக்கள் வித்தியாதரர் சிலர் வந்து பிராட்டி இருந்த இடத்தைச் சுற்றித் தீயின் ஆதிக்கம் செல்லவில்லை (6003) என்று கூறவும், மன அமைதி பெற்று மகிழ்ந்த மாருதி பிராட்டியைக் காணச் சென்றான். கண்டு, அவள் திருவடிகளை வணங்கி விடை கொண்டான். இராவணனுக்குப் பணி செய்யும் திக்பாலர்களில் ஒருவனாகிய அக்கினி அனுமன் இருக்கின்ற வரையில் மிக்க தைரியத்தோடு இலங்கையைச் சுட்டான். அக்கினி உள்ளிட்ட எண்மரும் இராவணனுக்குப் பணி செய்கின்றவர்கள். ஆதலால், மாருதி விடை பெற்றுச் சென்றவுடன் இராவணன் என்ன செய்வானோ என்று அஞ்சி அக்கினி ஒடி ஒளிந்துகொண்டான் என்ற அளவில் இலங்கை எரியூட்டு படலம் முடிகிறது. இக்காண்டத்தின் இறுதிப் படலம் திருவடி தொழுத படலமாகும். இப்பெயர் சற்று வியப்பைத் தருவதாகும். ஒரு காரியத்தைச் செய்வதனாலும் சிறப்பைப் பெறலாம். செய்யாமற்கூடச் சூழ்நிலையைப் பொறுத்துச் சிறப்பைப் பெறலாம். இப்படலப் பெயரின் நேரடிப் பொருள், இராமன் திருவடிகளை அனுமன் தொழுத படலம் என்பதாகும். இவ்வாறு, பொருள் கொள்வதற்கு இப்படலத்தின் 22ஆம் பாடல் தடையாக உள்ளது. அப்பாடல் வருமாறு: எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன் மொய் கழல் தொழுகிலன், முளி நீங்கிய தையலை நோக்கிய தலையன், கையினன், - வையகம் தழிஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான் (6028) இராமன் திருவடிகளைத் தொழவில்லை' என்று பாடலின் இரண்டாவது அடி குறிக்கிறது. இராமன் எதிரே நின்றும் அவன் திருவடிகளை ஒருவன் தொழவில்லை என்றால், அது தவறன்றோ என்று நினைக்கத் தோன்றும். அந்த நினைப்புத் தேவையில்லை என்பதுபோலப் பாடலின் 3-ஆம், 4ஆம் அடிகள் விளங்குகின்றன. 'புருஷகாரபூதை' என்று போற்றிச் சொல்லப்படும் தாயின் திருவடிகளை அனுமன் வணங்கினான். எனவே, இராமன் திருவடிகளை வணங்காத தால் பிழை ஒன்றும் இல்லை என்ற விளக்கத்தைத் தருகிறான்