பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கம்பன் எடுத்த முத்துக்கள். வேதவித்து ஆய மேலோன் மைந்தன் நீ ஆகவே, உன்னை மன்னிக்கின்றேன். அதுமட்டு மன்று, விரதம் பூண்டாய் . தவக்கோலம் கொண்டிருக்கிறாய். ஆகவே, உன்னைக் கொல்லக் கூடாது. 'ஆதலின் கொல்லல் ஆகாது என்று புன்சிரிப்பு மாறாமல், இராமன் பேசுவதையும் சினத்தின் எல்லையிலே நிற்கின்ற பரசுராமனையும் நம்முடைய மனக்கண்ணால் பார்க்கின்றோம். இப்பொழுதுவேறு ஒன்றும் சொல்ல முடியாத நிலையில், இமயமலை உயரத்தில் இருந்த பரசுராமன் கடுகாகச் சிறுத்து விடுகிறான். சாதாரண மனிதனாக நின்ற இராகவன் இமயமலை அளவுக்கு உயர்ந்துவிடுகிறான். ஆகவே, ஸ்திதப்பிரக்ஞ மனோநிலை என்பதை வெளிக்காட்டுவதற்கு மிகச் சிறந்த இடமாக இதனைக் கம்பன் வைத்துக் காட்டுகிறான். - - பரசுராமன் எதிரே, வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய், ஆதலின் கொல்லல் ஆகாது என்று கூறிவிட்டு இராமன் நிறுத்தினான். தப்பித்தோம், பிழைத்தோம் என்று பரசுராமன் நினைக்கின்ற நிலையில் ஒரு வார்த்தை சேர்க்கின்றான் இராமன். 'அம்பு இது பிழைப்பது அன்றால்' அம்பைப் பூட்டிவிட்டேன். இனி அந்த அம்பைச் சும்மா எடுத்துத் துணியிலே போடுவது இயலாத காரியம். இந்த அம்பு ஏதாவது ஒன்றை அழித்துவிட்டுத்தான் வரும். ஆகவே, யாரை, எதனை, எவ்வாறு அழிக்க வேண்டுமென்று சொல்வதை உனக்கே விட்டுவிடுகிறேன்' என்று சொல்லுகிறான். 'அம்பு இது பிழைப்பது அன்றால் யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின்' என்றான். . . . .