பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 55 அப்போது பரசுராமன் என்னுடைய தவத்தை யெல்லாம் مم உன்னுடைய அம்புக்கு இரையாக்குகிறேன் என்று சொல்லும் போது பரசுராமன் வீழ்ச்சி, இராமனின் உயர்ச்சி என்ற இரண்டையும் கம்பன் அற்புதமாக வைத்துக் காட்டுகிறான். ஆகவே, இராமகாதையில் உள்ள ஆறு காண்டங்களில் இராகவனை வளர்த்துக் காட்டுவதற்குப் பதிலாக, பால காண்டத்திலேயே தாடகை வதைப் படலம், அகலிகைப் படலம், பரசுராமப் படலம் என்ற மூன்று படலங்களில் இராமன் எத்தன்மையன், எத்தகைய மனோ நிலை உடையவன், என்ன பண்பாட்டை உடையவன். சமதிருஷ்டியை எப்படிப் பெற்றிருக்கிறான். மெய்யுணர்வு பெற்றவனாக எப்படி வாழ்கின்றான் என்பதை எடுத்துக் காட்டுவதன் மூலம் பின்னே இவன் என்னென்ன செய்யப்போகிறான் என்பதை நமக்கு அற்புதமாக வைத்துக் காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி. இராகவனுடைய இந்த வளர்ச்சியைக் காட்டக் கம்பன் பயன்படுத்திய நிகழ்ச்சிகள் மூன்று. கைவண்ண நிகழ்ச்சி, (தாடகைவதம்), கால் வண்ண நிகழ்ச்சி (அகலியை எழுச்சி) மன வண்ண நிகழ்ச்சி (பரசுராமன் வீழ்ச்சி) என்ற மூன்றிலும் ஒர் உண்மை மறைந்திருத்தலை, காண முடியும். திருத்த முடியாத கொடுமை (தாடகை அழிக்கப்படுகிறது; ஒருமுறை சிறுதவறு செய்த பிழைக்கு வருந்திய அகலிகை புதுவாழ்வை நோக்கிச் செல்லப் படைக்கப்படுகிறாள். (அகலிகை எழுச்சி) பெருந்தவம் புரிந்து அகங்காரத்தை மட்டும் அடக்க முடியாத பரசுராமன் மன்னிக்கப் படுகிறான். ஆனால், அகங்காரத். திற்குக் காரணமான தவம் அழிக்கப்படுகிறது; அவன் காக்கப்படுகிறான். பால காண்டத்தில் இராகவன் தசரதன் மைந்தன்மட்டும் என்று யாரும் எண்ணிட வேண்டா. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முச் செயல்களையும் செய்யும் பரம்பொருள் இவன் என்ற உண்மையை குறிப்பாக உணர்த்துகிறான் கவிஞன்.