பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை-அ-சீனிவாசன் 554 மூலபலப்படை வதம் செய்யப்பட்டது என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சியல்ல. அல்லது அது வெறும் ஒரு அசாதாரணமான போர்க்கள நிகழ்ச்சி மட்டுமல்ல. மூலபலப்படை என்பது இராவணனுடைய கடைசி ஆயுதமாகும். அது ஒரு ஆலகாலப்படை. உலகின் பல பாகங்களிலும் உள்ள அரக்கர்களின் சிறப்புப்படையாகும். அது ஒரு பயங்கரமான பெரும் படையாகும். இப்படையைக் கண்டு, எத்தனையோ அரும்பெரும் சாதனைகளைச் செய்துள்ள வானரப்படையே கூட கலங்குகிறது. கண்டு ஓடுகிறது. எனவே இராமனுடைய பணி இரட்டிப்பாயிற்று. ஒன்று அந்த வானரப்படையை மூல பலப்படையின் தாக்குதல்களிலிருந்து காக்க வேண்டும். அதன் பயத்தைப் போக்க வேண்டும். அத்துடன் மூலபலப்படையை அழிப்பதற்கான தகுதியான உத்திகளையும் கையாண்டு அதை ஒழிக்க வேண்டும். இந்த மகத்தான காரியத்தைத் தனது அவதாரக் கடமையாக இராமபிரான் வெற்றி கரமாகச் செய்து முடிக்கிறார். இலங்கையின் மூலபலப்படை அழிந்தது. இராவணனுடைய கோபம் மேலும் அதிகரித்துதானே தகுந்த தயாரிப்புகளுடன் பெரும் படை திரட்டி நேருக்கு நேராகப் போருக்குப் புறப்படுகிறான். “அரக்கர் சேனை ஓர் ஆயிரம் வெள்ளத் தை அமரில் துரக்கமானிடர் தம்மை என்று ஒரு புடை துரந்து வெருக்கொள் வானரச் சேனை மேல்தான் செல்வான் விரும்பி இருக்கும் தேரொடும் போயவன் இராவணன் எதிர்த்தான். ” பெரும்படையுடன் வந்த இராவணனை இலக்குவன் எதிர்த்தான். இராவணன் விடுத்த கணைகளையெல்லாம் இலக்குவன் தடுத்தான். வீடணன் இலக்குவனுக்கு அருகில் இருந்து உதவிக் கொண்டிருந்தான். வீடணனைக் கண்ட இராவணனுக்கு அவன் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. அவனைக் கொன்று விடக் கருதி அவன் மீது ஒரு சக்தி மிக்க வேற்படையை ஏவினான்.