பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் தனது காவியத்தை வால்மீகி முனிவர் எழுதியதைத் தழுவியே எழுதியுள்ளதாகப் பெரும்பாலும் கருதப் படுகிறது. இருப்பினும் கம்பர் தனது நூலில்

தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினார் உரையின் படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய மாண்பு"

என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே கம்பருடைய இந்தக் கூற்றுக்கு வேறு விளக்கங்களையும் காணலாம்.

வால்மீகி முனிவருக்கு முன்னர் இராமகாதை வட புல மக்களிடம் வாய் மொழியாகவும், வேறு பல வடிவங்களிலும் பரவியிருந்ததைப் போலவே தமிழ் நாட்டிலும் கம்பனுக்கு முன்பே தமிழ் மக்களுக்கிடையில் கற்றோரிடமும் மற்றோரிடமும் இராமகாதை பரவியிருந்தது பற்றிய பல செய்திகளும் கிடைக்கின்றன. உதாரணமாக ஆழ்வார்களின் பாசுரங்களில் பல இடங்களிலும் இராம கதையின் பல நிகழ்ச்சிகள் குறிப்பிடப் பட்டுள்ளதைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியங்களிலும் கூட சீதாராம கதைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கம்பனுடைய கூற்றுப்படி இராமன் கதையை வடமொழியில் மூலக்கதையாக மூவர் செய்துள்ளதாகத் தெரிகிறது. அம்மூவரும் இக்கதையை மூன்று விதமாக எழுதியுள்ளார்கள் என்பதும் தெரிய வருகிறது. கம்பனுடைய கவிதை வரிகளில் “மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின் படி” என்னும் கூற்றுப்படி மூவர் என்றும் அதற்கு மேலும் ஒருவர் என்றும் மேலும் பலர், சிலர் என்றும் கூடக் கொள்ளலாம். அந்த மூவர் ஆனவர் வசிட்டர், வியாசர், போதாயனர் ஆகியோராவர். இவர்களுக்கு முந்தியவர் வால்மீகி முனிவர் என்றும் கொள்ளலாம் அல்லது வாய் மொழியாக வந்த பல கதைகள், உரைகள் என்றும் கொள்ளலாம்.

வால்மீகி தவிர மற்ற மூவர் எழுதிய கதையில் கதைப் போக்கினைக் காட்டிலும் தத்துவ ஞானப் போக்குகளே அதிகம். வால்மீகி முனிவரைச் சிறந்த நாவன்மை மிக்கவர் என்று கம்பன்

{{{pagenum}}}