பக்கம்:கம்பன் கலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கம்பன் கலை யல்லாமல் அதை முழுவதுமாக அழித்து ஏறத்தாழ பரம்பொருளோடு ஒன்றிவிட்ட நிலையில் இருக்கின்ற இராமன் - இரணியன் அவதாரத்தை நரசிம்மன் அழிப்பது போல - இராவணனுடைய அகங்காரத்தையும் பரசுராமனுடைய அகங்காரத்தையும் அழிப்பதற்கு இப்போது வருகின்றான்." பின்னால் இராவணனுடைய வரலாறு வரப்போகின்றது. அதற்குக் கொடியேற்றம் செய்தது போன்றது இது. - அவன் வில்லை முறித்துத் திருமணம் செய்து கொண்டது உலகமறிந்த சமாசாரம். தசரதன் பெருமகிழ்ச்சிக் கடலிலே திளைத்து வருகின்றான். அந்த நிலையிலே தசரதன் எந்த ஒன்றுக்காக இந்த உலகத்திலே அஞ்சுவானோ எந்த ஒருவன் எதிர்ப்படக் கூடாது என்று நினைப்பானோ அந்த ஒருவன், பரசுராமன் நேரே வருகின்றான். அவன் வருகின்ற வரத்தைப் பத்துப் பாடல்களிலே கவிச்சக்கரவர்த்தி எடுத்துக் காட்டுவான் அதற்கேற்ற சந்தத்தை அமைத்து. மலைகள் தவிடு பொடியாக கண்களிலே கனல் பறக்க, மழுவிலே தீச்சுடர் தழுவ, சமுத்திரம் அலைபொங்க வருகின்றான். அந்தக் கோபம் என்பது அவன் உடன்பிறந்தது. ஆவேச அவதாரம் என்று பாகவதர்கள் இதனைச் சொல்லுவார்கள். கோபமே வடிவமாக இருக்கின்றான் பரசுராமன். அப்போது அந்தக் கோபம் உச்சநிலையிலே இருக்கின்றது. தசரதன், இராமன் இரண்டு பேரும் தேரில் இருக்கிறார்கள். இவன் வந்து வாயில் வந்தபடி பேசுகின்றான். "உலகத்தையெல்லாம் வென்றேன். ஒரு முனிவனுக்குத் தானமாகத் தந்தேன். இப்போது ஒரு மலையிலே இருக்கின்றேன். நீண்ட நாட்களாகப் போர். செய்து என் தினவு தீர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இப்போது உன்னோடு மலைய வந்துள்ளேன்", -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/16&oldid=770673" இலிருந்து மீள்விக்கப்பட்டது