208 ல் கம்பன் கலை உடனிருந்த இளையவன்கூட இவ் வரவேற்பை எதிர் பார்க்காமையால் அதிர்ந்து போய்விட்டான். இறுதியில், பிராட்டி, இளையவன் கையாலேயே நெருப்பை மூட்டித் தர வேண்டுகிறாள். இளையவன் இந்தக் கொடுமையை ஆற்றாமல் அண்ணனின் முகத்தைப் பார்த்தான். அண்ணன் காட்டிய இரகசிய முகக் குறிப்பில் மனம் அமைதி அடைந்து உடனே நெருப்பை மூட்டித் தருகிறான். இதைக் கவிஞன் அற்புதமாகக் கூறுமுகத்தான் இது ஒரு நாடகம் என்பதை அறிவுறுத்தி விடுகிறான்: "இளையவன் தனைஅழைத்து இடுதிதீ என வளைஒலி என்கையாள் வாயின் கூறினாள் உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் - களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான்' (மீட்சி, 78) இளைய பெருமாளுக்கு இராகவன் கண்ணின் கூறியதை அவள் உணர்ந்து கொண்டாள். இளையவனுக்குச் செய்த பிழைக்குக் கழுவாய் தேடுமுகமாக அவன் கையாலேயே தீ அமைத்துத் தர வேண்டினாள் பிராட்டி, அது நடைபெற்றவுடன் முழு அமைதியுடன் தீயில் புகுந்தாள். அவள் கற்பால் தீ சுடப்பட்டது. தாமரை மலராள் போல் மீட்டும் வெளி வந்த பிராட்டியின் உள்ளத்தின் ஆழத்திலிருந்த குற்ற உணர்வு சுடப்பட்டு விட்டதால் அவள் முழு அமைதி பெற்று விடுகிறாள். இதுவே பிராட்டியை இராகவன் தீப்புகச் செய்த காரணமாகும்.
பக்கம்:கம்பன் கலை.pdf/219
Appearance