58 ம் கம்பன் கலை என்றுதான் கூறுகிறார். எனவே, பெருங்காப்பியங்களில் போற்றப்படும் இந்த மங்கல வழக்கு (Eபphemism) கம்பநாடனாலும் முழுதும் போற்றி ஆளப்படுவதைக் காண்கிறோம். சுமந்திரனுடைய சொற்களைக் கேட்ட தசரதன் "நன்று சொல்லினை" என்று அவனிடம் தன் மகிழ்ச்சியைக் கூறிவிட்டு அவனையே பார்த்து "நீயே சென்று இராமனை அழைத்து வருக” என்றும் கட்டளை இடுகிறான். தசரதன் கட்டளையைத் தலைமேற்கொண்டு இராமன் இல்லம் நோக்கித் தேரைச் செலுத்துகிறான் சுமந்திரன். அவ்வாறு செல்லும் சுமந்திரனைக் கவிஞன், அவன் (தசரதன்) "மனம் அனையான்" (மந்திரப் படலம், 5) என்று வருணிக்கிறான். தசரதனும் சுமந்திரனும் நண்பர்கள் என்னில் எத்தகைய நண்பர்கள்? பிசிராந்தையும் கோப்பெருஞ் சோழனும் போன்ற உள்ளம் ஒன்றிய நண்பர்களாம். தசரதன் எது நினைத்தாலும் அதுவே சுமந்திரனுடைய நினைவாகவும் இருக்கும் என்றுகூறத் தேவை இல்லை. இவ்வாறு இராகவன் மனைக்குச் செல்லும் நிலையிலும் சுமந்திரனுடைய மனத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி நிறைந்து இருந்ததாம். "தலங்கள் யாவையும் பெற்றனன் தான் எனத் தளிர்ப்பான்” (மந்.ப. 5) - இவ்வுலகங்கள் அனைத்தையும் தனக்கே தசரதன் அளித்தால் எத்தகைய மகிழ்ச்சி கொள்ளக்கூடுமோ அத்தகைய மகிழ்ச்சி கொண்டானாம். இராமனிடம் மகன்மேல் கொள்வது போன்ற கழிபெருங் காதலுடன் பக்தியும் கொண்டிருந்தான் சுமந்திரன். எனவே, நேரே இராமனுடைய அரண்மனை சென்ற அவன், அழகனும் அழகியும் அமர்ந்திருக்கும் அக்காட்சியைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தானாம். அழகுடையவர்களைக் கண்கள் களிப்புறக் காணலாம்.
பக்கம்:கம்பன் கலை.pdf/68
Appearance