பக்கம்:கம்பன் கலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ) கம்பன் கலை மறக்க விரும்பாத ஒரு பெரு நூலைப் பாடப்போகிறேன் என்று கூறினானாம். மில்ட்டன் அவ்வாறு வாய்விட்டுக் கூறியதையே கம்பநாடன் போன்ற பெரிய காப்பியக் கலைஞர்கள் அன்றே இந்நாட்டில் செய்து காட்டியுள்ளனர். எனவே, கம்பநாடன் காப்பியத்தில் பல்வகை அறங்களும் பேசப் பெற்றிருக்கும் என்று கருதிவதில் தவறு இல்லை. அறம் இரண்டு வகைப்படும். முதலாவது வகை காலத்துக்கு ஏற்ப மாறுபடும் இயல்புடையது. சத்திரம் கட்டுதல் ஒரு காலத்தில் அறமாகக் கருதப்பட்டிருக்கலாம். போக்குவரத்து வசதி என்பதே இல்லாத அப் பழங் காலத்தில் சத்திரம் கட்டுதல் என்பது அறம்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், காலம் மாறி விட்டது. காலையில் கங்கையில் மூழ்கிவிட்டு மாலையில் இராமேச்சுரத்தில் புனலாடக்கூடிய வேகத்தில் பயணம் நடைபெறும் இக்காலத்தில் சத்திரம் கட்டிவைப்பது அறமன்று என்று கூறினால் தவறு ஒன்று மில்லை. இதுபோன்ற பல அறங்கள் காலாந்தரத்தில் மாறுபடும் இயல்புடையன. இரண்டாவது வகை. எக்காலத்தும் யாவர்க்கும் பொதுவான அறங்கள். அவை என்றும் மாறுபடுவதில்லை. இவற்றை அடிப்படையான அறங்கள் என்று கூறலாம். பெருங் காப்பியம் செய்யப் புகுகின்ற கவிஞன் மாறாத இந்த அடிப்படை அறங்களிலேயே தன் கருத்தைச் செலுத்து கின்றான். அதனால்தான் அந்த நூல் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கழித்துங்கூட அவை தம் மதிப்பில் குறையாமல் சமுதாயத்தில் உலவி வருகின்றன. நிலைபெற்ற இவ்விரண்டாவது வகை அறங்கள் பலப்பல வகைப்படும். தனிப்பட்ட மனிதன் மேற்கொள்ள வேண்டிய அறங்கள் சில. அதே மனிதன் சமுதாயத்தில் வாழும்பொழுது மேற்கொள்ள வேண்டியவை சில.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/96&oldid=770837" இலிருந்து மீள்விக்கப்பட்டது