பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

அரசர்கள் செல்லவேண்டிய முறைப்படி தசரத மன்னன் முன்னே சென்றான். மிதிலை வாழ் மக்களின் மனம் பின்னே சென்றது. இடையிலே ரகு வீரனாகிய ராமன் சென்றான் எப்படிச் சென்றான்? தன்னை யொத்த தம்பிமார் நெருங்கி வர, மின்னல் கொடிபோன்ற இடையுடைய சீதையுடன் சென்றான்.

𝑥𝑥𝑥𝑥

நெடுமுடி மன்னவன்—நீண்ட முடிதரித்த தசரத மன்னன்; முறையின்—முறைப்படி; முன்னே செல — முதலில் செல்லவும்; மிதிலை நல் மாநகர் உறைவார் மனம்—மிதிலையாகிய நல்ல பெரிய நகரில் வாழும் மக்களின் மனங்கள்; தனி பின் செல—தன்னைப் பெரிதும் பின்தொடர்ந்து வரவும்; வீரன்—ரகு வீரனாகிய இராமன்; நடுவே —நடுவில்; தன் நேர் புரை தருதம்பியர்—தனக்கு நிகரான மனம் ஒத்த தம்பியர் மூவரும்; தழுவி செல—தன்னைத் தொடர்ந்து வரவும்; மழை வாய்—மேகத்தில் தோன்றும்; மின்னே எனும்—மின்னல் கொடியே என்று சொல்லத்தக்க, இடையா ளொடும்—இடையுடைய சீதையுடனே இனிது ஏகினன் – மகிழ்ந்து சென்றான்.

𝑥𝑥𝑥𝑥

இவ்வாறு சென்று கொண்டிருந்த போது, மயில்கள் இடமிருந்து வலம் வந்தன. இது நல்ல நிமித்தம். பின்னே காகங்கள் வலமிருந்து இடம் சென்றன. இது தீ நிமித்தம். இவ்வாறு நிமித்தங்கள் ஏற்படவே அஞ்சா நெஞ்சம் கொண்ட தசரதன் அஞ்சிக் கலங்கினான். நிமித்தகனை அழைத்தான். நிமித்தங்களின் பயன் கூறுமாறு கேட்டான்.

“தீயன சில தோன்றும். எனினும் அவை விரைவில் நீங்கும். எனவே மனம் கலங்கவேண்டாம்” என்று கூறினான் நிமித்தகன்.

𝑥𝑥𝑥𝑥