பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

நாணயம் உடையவர்களாக இருந்தார்கள். பிறர் பொருள் மீது ஆசை கொள்ள மாட்டார்கள் எனவே களவு என்பதே இல்லை. “கள்வர் வந்து எங்கே நமது பொருளைக் கொண்டு போய் விடுவார்களோ என்கிற அச்சம் சிறிதும் இல்லை அந்த நாட்டு மக்களுக்கு, ஏன்? “எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையாரும் இல்லை” யல்லவா? அதனாலே இல்லாதவர் இருந்தால் தானே உடையவரிடமிருந்து அவர் தம் பொருள்களைக் களவாடுவான்! கள்வர் பயம் இன்மையாலே அந்த நாட்டு மக்கள் பொருள் உள்ள இடங்களைக் கதவு கொண்டு சாத்திப் பூட்டுப் போடுவதே இல்லை. திறந்தபடி அடைக்காத நெடுங்கதவு . கொண்ட வீடுகளாக இருக்கும். காவலரும் இருக்க மாட்டார்.

கள்வார் இலாமைப் பொருள்
        காவலும் இல்லை.

அந்த நாட்டிலே யாரும் பொய் சொல்ல மாட்டார்; மெய்யே பேசுவார். ஆகையினாலே ‘இது உண்மை; இது பொய்’ என்கிற பேச்சே அங்கு இல்லை.

உண்மை இல்லை ; பொய்
        உரை இலாமையால்

மக்கள் மேம்பாடுற்று விளங்கினார்கள். தாழ்வு என்பதே அங்கு இல்லை. காரணம் என்ன? அவர்கள் அறவழி நின்று நல்லனவே செய்தார்கள். அதனால் அவர் தம் எண்ணங்கள் சிறந்து விளங்கின. உள்ளத்திலே உயரிய கருத்துக்கள் இடம் பெற்று விட்ட படியால் கோபத்துக்கு இடமே இல்லை. கோபமே இல்லாமையால் சினத்தால் விளையும் சிறு குற்றங்கள் அந்த நாட்டிலே இல்லை. சினத்தால் வரும் சிறு குற்றங்கள் எவை? சிறு சிறு பூசல்கள், குடும்பச் சண்டைகள், தெருச் சண்டைகள், இவை காரணமாகக் கொலை செய்தல்; தற்கொலை செய்து

6