பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



88


தோகையும் – மயில் போலும் சாயலாளாகிய சீதையும்; இவ் வழி – இந்த வனத்தில் இருக்கும்; தோம் இல் சிந்தனை மாசற்ற மனமுடைய; சேகு அறு நோன்பினர் – குற்றமற்ற தவ விரதமுடையவர்; இவர்; என்னும் சித்தையாள் – என்ற எண்ணங்கொண்டவளாய்; பாகு இயல் கிளவி – தேன் பாகு போலும் சுவையுடைய இனிய சொற்களால்; ஈண்டு ஏகுமின் – இங்கு எழுந்தருள்க; என – என்று கூறி, எதிர் வந்து எய்தினாள் – அந்தக் கபட சந்நியாசியின் எதிரே வத்தாள்.

வெற்பிடை மதம் என
        வியர்க்கும் மேனியன்
அற்பினின் திரைபுரள்
        ஆசை வேலையன்
பொற்பினுக்கு அணியினைப்
        புகழின் சேக்கையைக்
கற்பினுக்கு அரசியைக்
        கண்ணில் நோக்கினான்.

இராவணனுடைய உடல் முழுவதும் வியர்வைத் துளிகள் அரும்பின; பெருக்கெடுத்து ஓடின; ஆசை எனும் கடலிலே அகப்பட்ட அவன், அழகுக்கு ஓர் அணியாய், புகழுக்கு இருப்பிடமாய், கற்பினுக்கு அரசியாய் விளங்கும் சீதாபிராட்டியைத் தன் கண்களால் கண்டான்.

வெற்பு இடை மதம் என – மலையிடத்தே உண்டாகும் சிலாசத்து எனும் கல்மதம்போல; வியர்க்கும் மேனியன் – வியர்வை பெருகும் உடலுடையவனும், அற்பினில் – அன்பினால்; திரை புரள் – அலை புரண்டு எழும்; ஆசை