பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

போது; ஏற்றம்‌ என்‌ நினைக்கல்‌ ஆகும்‌? – மேலும்‌ அதிகமான துன்பம்‌ எதனை நினைக்கமுடியும்‌? (வேறு எந்தத்‌ துன்பத்தையும்‌ நினைத்துச்‌ சொல்ல முடியாத அவ்வளவு பெரிய துன்பம்‌ என்றபடி) எதிர்‌ எடுத்து இயம்பலாகும்‌. இதற்கு எதிராக வேறு எத்துன்பத்தை எடுத்துக்‌ கூறுதல்‌ இயலும்‌? மாற்றம்‌ ஒன்றும்‌ இல்லை – அவள்‌ சொல்லக் கூடிய சொல்‌ எதுவுமில்லாது போயிற்று; செய்யும்‌ வினை இல்லை – அவனை விட்டுத்‌ தப்பிக்கக்‌ தக்க செயலும்‌ இல்லாது போயிற்று. (ஆகவே) வரிக்கல்‌ ஆகா – வரிக்கத்‌ தகாத; கூற்றம்‌ – இமயன்‌; வந்து உற்ற காலத்து – வந்த சமயத்திலே; உயிர்‌ என – தவிக்கும்‌ உயிர்‌ போல; குலைவு கொண்டாள்‌ – நடுக்கம்‌ கொண்டாள்‌.


“குலைவு உறல்‌, அன்னம்‌! முன்னம்‌
        யாரையும்‌ கும்பிடா என்‌
தலைமிசை மகுடம்‌ என்னத்‌
        தனித்தனி இனிது தாங்கி
அலகு இல்‌ பூண்‌ அரம்பை மாதர்‌
        அடி முறை ஏவல்‌ செய்ய
உலகம்‌ ஈரேழும்‌ ஆளும்‌
        செல்வத்துள்‌ உறைதி” என்றான்‌.

அப்போது இராவணன்‌ சொல்கிறான்‌; “அன்னம்‌ போன்றவளே! அஞ்சாதே. யாரையும்‌ கும்பிட்டு அறியாத என்‌ தலைமீது உள்ள கிரீடம்‌ போல உன்னை என்‌ தலை மீது தாங்குவேன்‌; தேவ மகளிர்‌ ஏவல்‌ செய்ய வைப்பேன்‌. ஈரேழு பதினான்கு உலகங்களையும்‌ ஆளும்‌ பெரும்‌ செல்வத்‌தில்‌ மகிழ்ந்திருப்பாயாக.”