பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



120

இருந்த தரையோடும்; எடுத்த கை நால் ஐந்து – பெயர்த்து எடுத்த இருபதுகைகளும்; தலை பத்தும் – தலைகள் பத்தும்; அலைந்து உலைய – இராமபிரான் விடும் பகழியால்; அறுந்து சிந்தும்படி – கீழே விழும்படி; கண்டு – நீங்கள் பார்த்து; சிரிக்கிலீரோ – சிரிக்கமாட்டீர்களோ!

இவ்விதம் பலவாறு கூறிப் புலம்பி அழுகின்ற சீதையைப் பார்த்து இராவணன் சொல்கிறான்:

“நீ சொல்கிற அந்த மனிதர்கள் போரிலே என்னைக் கொன்று உன்னை மீட்கப் போகிறார்களா? அவர்களுக்கு வல்லமை இருந்தால் மீட்டுக் கொள்ளட்டுமே!”

இவ்வாறு சொல்லித் தன் கைகளைக்கொட்டி பரிகாசமாகச் சிரித்தான் அந்த இராவணன்.

அப்போது சீதை சொல்கிறாள்:

“உன் மாயையினாலே வஞ்சகமாகப் பொய்மான் ஒன்றை ஆக்கினாய். அவ்வாறு உண்டாக்கி உன் உயிர் கவரும் கூற்றாகிய இராமனை அந்த வஞ்ச மான் பின்னே போகச் செய்தாய், பின் அவர் இல்லாத சமயத்திலே நான் தனித்து இருந்தபோது வந்து புகுந்து என்னைக்கொண்டு போகிறாய்; கள்வனே போல் கவர்ந்து செல்கின்றாய்.

அந்த இராமனோடு நேர்நின்று போர்செய்து உன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் தைரியமும் திறமையும் உனக்கு இருக்குமானால், உன் தேரை இவ்விடம் விட்டுச் செலுத்தாதே. நீ சுத்த வீரனோ! உன் இனத்தவரான சுரதுரஷணாதியரைக் கொன்று, உன் தங்கை சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து வாட்டிய மனிதர்கள் காட்டிலே இருக்கிறார்கள் என்பது கேட்டும் நீ இந்த மாயம் செய்தது எதனால்? அவர்கள்பால் நீ கொண்ட அச்சம் அன்றோ.”