பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



125

சுருக்கி மறைத்துக்கொண்டு; ஒதுங்கி நையவே – ஒதுங்கி சென்று வருந்த.

யானையும், யாளியும்
        முதல் யாவையும்
கான் நெடு மரத்தொடு
        தூறுகள் இவை
மேல் நிமிர்ந்து இரு
        சிறை வீச்சின் ஏறலால்
வானமும் கானமும்
        மாறு கொள்ளவே.

சடாயு தன் இரு சிறகுகளையும் வீசுதலால் எழுந்த காற்றின் வேகத்தினாலே என்ன நிகழ்ந்தது? யானை, யாளி முதலிய விலங்குகளும், காட்டில் உள்ள நெடிய மரங்களும், புதர்களும், கற்களும். மேலே எழும்பின. வானத்திலே பறந்தன. அது எப்படி இருந்தது? எது வானம், எது கானகம் என்று தெரியாமல் நிலை மாறிக் காட்சியளித்தது.

யானையும் – யானைகளும்; யாளியும் – யாளிகளும்; முதல் யாவையும் – முதலிய எல்லா விலங்குகளும்; கான் நெடுமரத்தொடு – காட்டில் உள்ள நெடிய மரங்களோடு; தூறு கல் இவை – புதர்கள், கற்கள் ஆகிய இவைகளும், இரு சிறை – சடாயுவின் இரண்டு சிறகுகள்; வீச்சின் – வீசுவதினாலே (எழும் காற்றின் வேகத்தினாலே) மேல் நிமிர்ந்து ஏறலால் – தம் நிலை பெயர்ந்து மேலே எழுந்து வானத்தில் ஏறிச் செல்வதால்; வானமும் கானமும் – ஆகாயமும் காடும்; மாறு கொள்ளவே – இடம் விட்டு மாறி மயங்கின.