பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சுய உருவைக் கொண்டான். விரும்பாத ஒரு பெண்ணைத் தொட்டால் தனக்குடனே இறுதி உண்டாகும் என்ற சாபம் நினைவுக்கு வந்தது. எனவே சீதை இருந்த நிலத்தையே பெயர்த்து தேரில் வைத்துச் செல்லலானான். சீதையின் கூக்குரல் சடாயுவின் காதில் விழுந்தது. உடன் இராவணனை எதிர்த்து வீரமாகப் பொருதான். ஆனால் இறுதியில் சடாயு அவன் எறிந்த தெய்வீக வாளினால் வீழ்ந்தான். அரக்கன் சீதையை இலங்கையில் அசோகவனத்தில் கொடிய அரக்கியர் நடுவே சிறை வைத்தான். இராமனும் லட்சுமணனும் பன்னசாலையையடைந்து சானகியைக் காணாது அவளை தேடிச் சென்றபோது, குற்றுயிராகச் சடாயுவைக் கண்டனர். விவரங்களை அறிந்தனர். இராமபிரான் சடாயுவுக்கு ஈமக்கடன் செய்தான்.

9. அயோமுகிப் படலம்

இராகவன் தன் தம்பியோடு, வனத்தில் செல்கையில் அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. லட்சுமணனை நீர் கொண்டு வரச் சொன்னான். லட்சுமணனும் சென்றான். வழியில் அயோமுகி என்றொரு அரக்கி. இளையவன்மீது ஆறாக் காதல் கொண்டாள். அழகிய உருவங்கொண்டு, லட்சுமணனை எடுத்துச் சென்றாள். இராமனின் தம்பியோ அவளுடைய மூக்கை அறுத்து, அவளிடமிருந்து மீண்டான்.

10. கவந்தப் படலம்

கவந்தன், சாபத்தினால் அரக்கனானவன். கவந்தன் வசித்த வனத்தை அடைந்தபோது, தன் இரண்டு கைகளையும் நீட்டினான். இராமனும் லட்சுமணனும் சிக்கவே, வயிற்றில் அவர்களைத் திணிக்க முற்பட்டான். இராமனும் இளையவனும் தங்கள் வாளினால் அவன் இரண்டு தோள்களையும் வெட்டித் தள்ளினர். சாபம் நீங்கினான் கவந்தன். இருவரையும் தொழுதான். இனி அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினான்.

11. சபரி பிறப்பு நீங்கு படலம்

சபரி மதங்கரது சீடர்களுக்கு உபசாரஞ் செய்துகொண்டு அவ்வாசிரமத்திலேயே வசித்து வந்த தவப்பெண். இந்த ஆசிரமத்திற்கு தசரதனின் இரு மகன்களும் வரும் செய்தி கேட்டாள். அவ்வனத்தில் உள்ள நல்ல கனிகளைச் சேர்த்து வைத்தாள். அப்பழங்களைக் கொடுத்து இராம லட்சுமணரை உபசரித்தாள். இராமபிரானின் அருளால் சபரி பிறப்பு நீங்கிய படலமாகிய இதுவே ஆரண்ய காண்டத்தின் பதினோறாவது படலம்.